இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்கு இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாகப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2023 மே 18 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் தேசிய துப்பாக்கிச் சங்கம், இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒலிம்பிக் அல்லாத துப்பாக்கிச் சுடுதல் நிகழ்வுகளின் நிர்வாகத்திற்கு பொறுப்பாகும்.

தேசிய துப்பாக்கி சங்கத்தின் அரசியலமைப்பின் படி, அதன் நிர்வாகப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முப்படை தளபதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன்படி, இலங்கையில் உள்ள 13 பிரபல துப்பாக்கி சுடும் விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இலங்கையின் தேசிய துப்பாக்கி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம், சங்கத்தின் நிர்வாகப் பணிகள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் மஞ்சுள திஸாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், சங்கத்தின் நிர்வாகப் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் கேப்டன் டிஎம்டிசி பண்டார தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்கான பொதுச் செயலாளராகவும், கமாண்டர் லலித் முதியான்சே பொருளாளராகவும், லெப்டினன்ட் கமாண்டர் மதுஷிகா கத்ரியராச்சி துணைச் செயலாளராகவும், லெப்டினன்ட் எல்டிஆர்டபிள்யூ.ஒய் தம்புகல துணைப் பொருளாளராகவும், வெப்டினள்ட் ஜீஆர்எஸ்பீ ரத்மலே சட்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர்.