14 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது
14 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் தொடக்க விழா, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் இன்று (2026 ஆகஸ்ட் 14) வெலிசர Wave n’ Lake கடற்படை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இம்முறை விளையாட்டு விழா, பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுச் சபையின் தற்போதைய தலைவரும் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடக்க விழாவின் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு (04) முன்னணி விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். அத்துடன், விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுக் சின்னங்கள் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், ஆயுதப் படைகளுக்கிடையில் ஒற்றுமை, விளையாட்டுத்தன்மை, நல்லுறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதே இவ்விளையாட்டுப் போட்டியின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், இம்முறை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவில் 39 விளையாட்டு நிகழ்வுகளின் கீழ் 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். முப்படையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தாயகத்திற்கு விளையாட்டு வெற்றிகளைப் பெற்றுத் தருவதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதற்கமைய, 2026/2027 பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் ஊடாக முப்படையினரில் திறமைமிக்க பல புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உட்பட முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.













