பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்கும் மகளிரை வலுவூட்டும் விசேட பயிலரங்கு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது
‘பலமான குடும்ப கட்டமைப்பிற்கும் பாதுகாப்பான சமூகத்திற்குமாக மகளிரை வலுவூட்டுதல்’ எனும் கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகளுக்கான விசேட விழிப்புணர்வு பயிலரங்கு, 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கடற்படை தலைமையக பிரதான கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
கடற்படை ஒழுக்காற்று திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்கில், பலமான குடும்ப அமைப்பையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை கடற்படையின் பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகளை வலுவூட்டும் வகையில், துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் விசேட விழிப்புணர்வு அமர்வுகள் நடாத்தப்பட்டன.
அதற்கமைய, பாலின சமத்துவ ஆலோசகர் திருமதி மொனிகா சமரவீர அவர்களினால் ‘பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்: பலமான குடும்பங்களுக்கும் சமூகத்திற்குமாக மகளிரை வலுவூட்டுதல்’ எனும் தலைப்பிலும், களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் பேராசிரியை அனுஷா எதிரிசிங்க அவர்களினால் ‘அலுவலக மற்றும் வீட்டு வன்புணர்வுகளுக்கு பதிலளித்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலும், இலங்கை தொழில்முறை உளவியல் ஆலோசகர்கள் சங்கத்தின் தலைவி கலாநிதி பாக்யா அபேசிங்க அவர்களினால் ‘பெண்களின் தனிப்பட்ட சுகாதாரம்: குடும்ப நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதில் அதன் பங்கு’ எனும் தலைப்பிலும் இங்கு சொற்பொழிவுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
மேலும், இந்நிகழ்வில் கடற்படை தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, பணிப்பாளர் நாயகம் பணியாளர் ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன மற்றும் பதில் ஒழுக்காற்று அதிகாரி கொமடோர் பிரதீப் டோசன் உள்ளிட்ட கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள், பெண் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீராங்கனைகள் பலர் கலந்துகொண்டனர்.













