‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ படகோட்டப் போட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் 6 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ பாய்மரப் படகோட்டப் போட்டி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை பாய்மர சங்கத்தின் ஆதரவுடன் 2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் நான்கு (04) நாட்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தின் டச்சு வளைகுடா (Dutch Bay) கடல் பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2026 ஆகஸ்ட் 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
இலங்கை பாய்மர சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையில் Cup Championship மற்றும் Open Championship என இரண்டு (02) பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் இத்தாலி, இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா மற்றும் இலங்கை உட்பட ஆறு (06) நாடுகளின் கடற்படைப் அகாடமிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள், திறந்த பிரிவும் உள்ளடங்கலாக 40 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில், நான்கு (04) நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் ILCA 4 பிரிவில் முதலாம் இடத்தை இலங்கையின் Muazzam Imtiaz அவர்களும், அதே பிரிவில் இரண்டாம் இடத்தை Minuga Nimsira Hettigamage அவர்களும், மூன்றாம் இடத்தை Kevaan De Costa அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
ILCA 6 பிரிவில் முதலாம் இடத்தை இலங்கை கடற்படையின் ப்லீட் சீப் பெடி ஒபிசர் பிபிடிஎஸ் ராஜபக்ஷ அவர்களும், அதே பிரிவில் இரண்டாம் இடத்தை இலங்கையின் Arianna Taalya Tranchell அவர்களும், மூன்றாம் இடத்தை இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் அமன் Aman M Vyas அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
ILCA 7 பிரிவில் முதலாம் இடத்தை இலங்கை கடற்படையின் பெடி ஒபிசர் யுடி ராஜபக்ஷ அவர்களும், அதே பிரிவில் இரண்டாம் இடத்தை லீடிங் சீமன் ஜேஎஸ் செனவிரத்ன அவர்களும், மூன்றாம் இடத்தை லீடிங் சீமன் ஏஎம்ஜேபி அத்தநாயக்க அவர்களும் பெற்றுக்கொண்டனர். போட்டியின் Open Championship பிரிவில் முதலாம் இடத்தை இலங்கை கடற்படையின் ப்லீட் சீப் பெடி ஒபிசர் பிபிடிஎஸ் ராஜபக்ஷ அவர்களும், இரண்டாம் இடத்தை இலங்கையின் Muazzam Imtiaz அவர்களும், அதே பிரிவில் மூன்றாம் இடத்தை இலங்கையின் Minuga Nimsira Hettigamage அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர், நிறைவு விழாவில் உரையாற்றிய கடற்படை தளபதி, வெளிநாட்டு கடற்படைப் அகாடமிகள் மற்றும் இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்கள், வெற்றியாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, இப்போட்டியானது திருகோணமலை கடற்படைத் தள கடல் எல்லைக்குள் மட்டும் வரையறுக்கப்படாமல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர் விளையாட்டு பிரியர்களைக் கவரும் வகையில் வருடாந்த விளையாட்டு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்படுவதே கடற்படையின் எதிர்பார்ப்பு என்றும், எதிர்காலத்தில் இப்போட்டியைக் காண்பதற்காகப் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டின் மூலம் வளரும் விளையாட்டு மனப்பான்மை, குழு உணர்வு, சகோதரத்துவம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை வலியுறுத்திய கடற்படை தளபதி, ‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த பாதுகாப்பு அமைச்சு உட்பட அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஏனைய பங்காளர்களின் பங்களிப்பைப் பாராட்டி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இப்போட்டியை வருடாந்தம் நடத்துவதன் மூலம், விளையாட்டின் ஊடாக வெளிநாட்டு கடற்படைகளுடனான உறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையின் நீர் விளையாட்டுத் துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல் ஆகியவற்றை கடற்படை எதிர்பார்க்கிறது.
மேலும், இந்நிகழ்வில் இராஜதந்திர பிரதிநிதிகள், திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. டபிள்யூஜிஎம் ஹேமந்த குமார, கடற்படை துணை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட அக்கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், வெளிநாட்டு கடற்படை அகாடமிகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை பாய்மர சங்கத்தின் உறுப்பினர்கள், கடற்படை பாய்மர குழுவின் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், பல்வேறு நிறுவனங்களின் அனுசரணையுடன் வெற்றிகரமாக நடைபெற்ற இப்போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையாளர்களாக சிரச TV மற்றும் NEWS 1ST ஆகியன செயற்பட்டன.













