வறட்சியால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் இயற்கை சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றாடல் நட்பு திட்டங்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்கு இணையாக, தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள போனி குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டம், வடக்கு கடற்படை கட்டளையினால் 2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளதால், தீவுப் பகுதிகளில் வாழும் போனி குதிரைகள் உட்பட ஏனைய வனவிலங்குகள் குடிநீர் தட்டப்பாட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதற்கமைய, நெடுந்தீவின் பல்லுயிர்ப் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், வடக்கு கடற்படைத் தளபதியின் மேற்பார்வையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனமான 'வசப' மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நெடுந்தீவின் அழகிற்குப் பங்களிக்கும், அத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக இவ்வாறாகக் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் சுத்தமான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தீவுப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் மக்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியையும் கடற்படை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.













