EVENT NEWS 2026

கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட CARAT-2026 கடற்பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

31 Jul 2026

அமெரிக்க பசிபிக் கடற்படையால் (U.S. Pacific Fleet) இலங்கை கடற்படையுடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டுக்கான ஒத்துழைப்பு, ஆயத்த நிலை மற்றும் பயிற்சிக்கான இருதரப்புப் செயற்பாடுகள் (Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT 2026) ஜூலை 27 முதல் 30 வரை திருகோணமலைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டதுடன், அதன் நிறைவு இன்று (2026 ஜூலை 31) வெற்றிகரமாக நடைபெற்றது.

இன்று (2026 ஜூலை 31) சாம்பூர் கடற்படை மரைன் படை தலைமையக வளாகத்தில் நடைபெற்ற CARAT-2026 பயிற்சியின் நிறைவானது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும் பாதுகாப்பு ஆலோசகருமான Lieutenant Colonel Matthew House மற்றும் பதில் கொடி அதிகாரி கடற்படை படைகளின் கட்டளை, கொமடோர் தனேஷ் பத்பெரிய ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கடற்படை, அமெரிக்கக் கடற்படை, அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த இருதரப்புப் பயிற்சியின் மூலம்; எல்லைகளைத் தாண்டி அமைந்துள்ள கடல்சார் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் திறனை மேலும் வளர்த்துக் கொள்ளுதல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைச் செயற்படுத்துதல், இயற்கைப் பேரிடர்களின் போது திறம்படச் செயற்படுதல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு அவசியமான இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல் வழிகளைப் பாதுகாப்பாகப் பேணிச் செல்வதற்கான ஒத்துழைப்பும் நடைமுறைத் திறன்களும் மேலும் பலப்படுத்திக் கொள்ளப்பட்டன.

மேலும், இத்தகைய பயிற்சிகளின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பும் பரஸ்பரத் தொடர்புகளும் மேலும் வளர்க்கப்படுவதுடன், எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்கள் உள்ளிட்ட பொதுவான கடல்சார் சவால்களைக் கூட்டாக எதிர்கொள்வதற்கு இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு மாபெரும் உதவியாக அமையும்.

CARAT-2026 நிறைவு விழாவில் இலங்கை கடற்படை, அமெரிக்கக் கடற்படை, அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகளும் முப்படை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools