இலங்கை கடற்படை 'நேர்மையான அரச சேவைக்கான' உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது
‘நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்திற்கு அமைவாக, நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை இலங்கை கடற்படை இன்று (2026 ஜூலை 27) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் ஏற்றுக் கொண்டதுடன், அதற்கு அமைவாக கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் உரிய கப்பல்கள் மற்றும் நிறுவனங்களிலும் அரச உறுதிமொழி பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
பிரஜைகளின் ஒழுக்கநெறிகள், நல்நெறி விழுமியங்கள் மற்றும் நல்லாட்சிக் கருத்துக்களை மேலும் மேம்படுத்தி, சமூகம் முழுவதும் நேர்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி 'தூய்மையான இலங்கையை' கட்டியெழுப்புவதே இத்தேசிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கமைய, ஒற்றுமை, தன்னம்பிக்கை, பொறுப்புக்கூறல், நம்பிக்கை, சரியான நோக்கு, சிக்கனம், வெளிப்படைத்தன்மை, சமத்துவம், உடன்பாடு மற்றும் தன்னடக்கம் ஆகிய முன்மாதிரிகளை நடைமுறைப்படுத்தி, அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தேசிய இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காக கடற்படையின் வளங்கள், தொழில்முறை அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை அதிகபட்சமாக வழங்குவதற்கு கடற்படை உறுப்பினர்களும் சிவில் ஊழியர்களும் இதன்போது உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த 'நேர்மையான கலாச்சாரம் – தூய்மையான இலங்கை'க்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.













