புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) 03 ஜூலை அன்று அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துத் தெரிவித்த அவர், நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் இலங்கை கடற்படை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, நாட்டிற்கும் கடற்படைக்கும் மேலும் கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
சுமுகமான கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் கடற்படைத் தளபதியும் கடல்சார் பாதுகாப்பு, தற்போதைய செயற்பாட்டு பொறுப்புகள் மற்றும் இலங்கை கடற்படையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். மேலும், நிறுவனத் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் கடற்படையின் பங்கினை மேலும் மேம்படுத்துதல் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடினர்.
ஊடக ஆதரவு - www.defence.lk













