EVENT NEWS › 2026

76வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசீர்வாதம் வேண்டி நடத்தப்பட்ட கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை

20 Nov 2026

2026 டிசம்பர் மாதம் 09ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிகு 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படைக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத வழிபாட்டு நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக, ஒன்றிணைந்த கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் விசேட ஆராதனை, கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி நிஷாந்த சாகர ஜயமான்ன ஆண்டகையின் வழிநடத்தலில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் பிரதம தலைமையில் இன்று (2026 நவம்பர் 20) கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்றது.

1991ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயரிய கடற்படை சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளுக்கு அமைவாக, தொடர்ச்சியாக 35 ஆண்டுகளாக கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை, அதி வணக்கத்திற்குரிய அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி நிஷாந்த சாகர ஜயமான்ன அவர்களின் தலைமையில், ரோமன் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த எட்டு (08) அருட்தந்தையர்களின் வருகை மற்றும் பிரார்த்தனைகளுடன் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது.

“கடலின் பாதுகாவலரான உங்களுடன் எமது ஆண்டவரின் சமாதானமும் பலமும் நிலைத்திருக்கட்டும்” எனத் தெரிவித்து, இலங்கை கடற்படையினரால் ஈட்டப்பட்ட அனைத்து வெற்றிகளுக்காகவும் இறைவனுக்குப் புகழ் செலுத்தி நன்றி தெரிவித்த அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை, தாய்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக உன்னதமான தியாகங்களைச் செய்த அனைவரையும் கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார். அத்துடன், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக கடற்படைக் கொடி மற்றும் கடற்படை கட்டளைகளின் கொடிகளுக்கு ஆசீர்வாதப் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், கடற்படையின் 76 ஆண்டுகால வரலாற்றில் தாய்நாட்டின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மற்றும் போரில் காயமடைந்த வீரமிக்க கடற்படைப் போர்வீரர்களுக்கும், தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஒட்டுமொத்த கடற்படைக்கும் இதன்போது ஆசீர்வாதங்கள் வேண்டிப் பிரார்த்திக்கப்பட்டது.

மேலும், இவ்வாராதனையில் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படைப் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திஸேரா உள்ளிட்ட கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Accessibility Tools