திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை கடற்படை மருத்துவமனை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிகொண்டது. 2026 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், ஊவா மாகாண கௌரவ ஆளுநர் சட்டத்தரணி ஜேஎம் கபில ஜயசேகர அவர்களினால், திருகோணமலை கடற்படை மருத்துவமனைக்கான குறித்த உற்பத்தித்திறன் விருது, பிரதி பணிப்பாளர் மருத்துவ சேவைகள், சத்திரசிகிச்சை நிபுணர் கெப்டன் துமிந்த சமரவிக்ரம அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை கடற்படை மருத்துவமனையின் சேவைகளை உயர் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட்ட தலைமைத்துவம், சேவை பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதினை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன.
அதற்கமைய, மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறையின் நுண் அளவிலான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று (03) நிறுவனங்களுள் ஒன்றாகத் திருகோணமலை கடற்படை மருத்துவமனை தெரிவுசெய்யப்பட்டமை, சுகாதார மருத்துவ சேவைகளை வழங்குவதில் இலங்கை கடற்படை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான சாதனையாகும்.













