EVENT NEWS › 2026

தெற்கு கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கடற்படையினரின் துரித தலையீட்டின் மூலம் கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்

16 Nov 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர் (01), திடீர் சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் கடற்படையினரால் இன்று (2026 நவம்பர் 16) காலை துரிதமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

2026 ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஐந்து மீனவர்களுடன் (05) கடலுக்குப் புறப்பட்ட ‘Mary 02’ (IMUL-A-0475 CHW) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 546 கடல் மைல் தொலைவில் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகிலிருந்த மீனவர் ஒருவர் (01) திடீர் சுகவீனமடைந்துள்ளார். குறித்த மீனவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அவரைக் கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கடற்பிரதேசத்தின் ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களுக்கு இது தொடர்பில் அறிவிக்க அந்த மையம் நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய, ‘BW Helios’ எனும் வர்த்தகக் கப்பல் மூலம் நோய்வாய்ப்பட்ட மீனவர் பாதுகாப்பாக அக்கப்பலில் ஏற்றப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக அவரைக் கரைக்கு அழைத்து வருவதற்காக 2026 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட P 411 எனும் அதிவேக தாக்குதல் படகு குறித்த வர்த்தகக் கப்பலை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, P 411 எனும் படகில் குறித்த மீனவர் (01) ஏற்றப்பட்ட பின்னர், அவருக்கு ஆரம்பகட்ட முதலுதவிகளை வழங்கி துரிதமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கும், மேலதிக சிகிச்சைக்காக அவரை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு துரித நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

Accessibility Tools