76ஆவது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிகாரிகளுக்கான நட்புரீதியிலான சந்திப்பு வெலிசரவில் அமைந்துள்ள Wave N’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெருமைமிகு 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சர்வமத அனுஷ்டானங்கள் மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு கடற்படையினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி கௌஷல்யா ஓபாத பெர்னாண்டோ ஆகியோரின் அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் அவரது துணைவியார் ஆகியோரின் தலைமையில், கடற்படை அதிகாரிகளுக்கான நட்புரீதியிலான சந்திப்பு 2026 நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெலிசரவில் அமைந்துள்ள Wave N’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடற்படையின் பெருமைமிகு ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தரும் சேவையிலுள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளுக்கு இடையிலான நட்புறவையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், கடற்படையினரால் இந்த அதிகாரிகளுக்கான நட்புரீதியிலான சந்திப்பு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) மற்றும் அவரது துணைவியார், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அவரது துணைவியார், இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, முன்னாள் கடற்படைத் தளபதிகள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் கௌரவமிக்க அதிதிகள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நடைபெற்ற நட்புரீதியிலான சந்திப்பு, ‘Night Beneath the Waves’ எனும் கருப்பொருளின் கீழ் பாடல், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் மேலும் சிறப்பிக்கப்பட்டது.
மேலும், இசைத்துறையில் புகழ்பெற்ற இசைக்குழுவான ‘Warehouse’ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளுடன், கடற்படை இசைக்குழு மற்றும் நடனக் கலைஞர்கள், அத்துடன் நாட்டின் புகழ்பெற்ற நடன மற்றும் பாடல் கலைஞர்களின் பங்களிப்புடன் இந்நட்புரீதியிலான சந்திப்பு வண்ணமயமாக அமைந்தது. இதன்போது, பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், அப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அதிதிகளின் பங்கேற்புடன் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் கடற்படைப் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, கடற்படைப் பிரதிப் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன உள்ளிட்ட ஏனைய கடற்படை கட்டளைத் தளபதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சேவையிலுள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.













