கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் மாணவர் தலைவர்கள் தின நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு
கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் மாணவர் தலைவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று 2026 நவம்பர் 03 ஆம் திகதி குறித்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் பணிப்பாளர் பிரிகேடியர் அனில் பிரியதர்ஷன மற்றும் கல்லூரியின் அதிபர் திருமதி மதூகா தேசமன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஆசிரியர்களின் அழைப்பின் பேரில், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து சிறப்பித்தார்.
அதன்படி, பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை, கல்லூரியின் அதிபர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் அன்புடன் வரவேற்றதைத் தொடர்ந்து, கல்லூரியின் மாணவர் படையணியினரால் கடற்படைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் தலைமை மாணவர் தலைவர் சதேவ் ஆகாஷ், கடற்படைத் தளபதியை விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், கடற்படைத் தளபதியை விழா மேடைக்கு வரவேற்கும் வகையில், கல்லூரியின் தலைமை மாணவர் தலைவர் சதேவ் ஆகாஷ் மற்றும் தலைமை மாணவித் தலைவி தனீஷா டியுமலீ ஆகியோர் வரவேற்புரையை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, விழா மேடையில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் மாணவர் தலைவர்கள் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தாம் பெரும் கௌரவமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, தற்போது பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, பாடசாலைகளுக்கு அருகாமையிலேயே போதைப்பொருள் அச்சுறுத்தல் பரவி வருவதாகவும், இந்த அச்சுறுத்தலிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் ஆகியோருக்கு விசேட பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த வகையில், பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் மாணவர் தலைவர்கள் குழுவினர் பாராட்டத்தக்க பணியை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையானது, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்த கடற்படைத் தளபதி, போதைப்பொருள் பாவனையின் பக்கம் மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் செயற்படும் தூண்டுதல் காரணிகள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தனது பாடசாலைக் கால அனுபவங்களை நினைவுகூர்ந்த கடற்படைத் தளபதி, கடந்த காலங்களில் மாணவர் தலைவர்கள் பாடசாலைக்குள் எதிர்கொண்ட சவால்களைக் காட்டிலும், தற்போதைய ‘Gen Z’ தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட தன்மையிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். ‘Gen Z’ தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுடன் பழகும் ஒரு தந்தை என்ற வகையில், தற்போதைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தமக்கு நல்ல புரிதல் இருப்பதாகக் குறிப்பிட்ட கடற்படைத் தளபதி, இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மாணவர் தலைவர்களும் தலைவிகளும் தமது செயற்பாடுகள் மூலம் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என வலியுறுத்திய கடற்படைத் தளபதி, மாணவர் தலைவர்கள் தங்களிடமிருந்து ஏனையவர்கள் எதிர்பார்க்கும் முன்மாதிரியைத் தமது செயல்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதிகாரத்தை விட பொறுப்புக்கும், பதவியை விட சேவைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், நண்பர்களிடையே ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை அதிகபட்ச அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி, பாடசாலையின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு மாணவர் தலைவர்களுக்கு அறிவுறுத்திய கடற்படைத் தளபதி, அவர்களுக்கு வெற்றிகரமான எதிர்காலம் அமைய வாழ்த்துத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
கல்லூரியின் மாணவர் தலைவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘Phoenix Labyrinth’ தலைமைத்துவச் செயற்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்விலும் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார். இதன்போது, கல்லூரியின் சார்பில் கடற்படைத் தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் நிர்வாகப் பிரதிப் பணிப்பாளர் கர்ணல் பந்துல செரசிங்க, பிரதி அதிபர்களான திருமதி நிதாஸ்தி அபேசேகர (கல்வி அபிவிருத்தி), திரு அரோஷ ஜயசிங்க (விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்), திரு கிரிஷான் மனோஜ் (இடைநிலைப் பிரிவு) மற்றும் உதவி அதிபர்களான திருமதி கேடி மங்களிகா, திருமதி தினுகா பெரேரா, திருமதி தர்ஷிகா சிறிமான்ன உள்ளிட்ட பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியின் ஆசிரியர் குழுவினர், மாணவ மாணவியர் மற்றும் அழைக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் தலைவர்களும் தலைவிகளும் கலந்துகொண்டனர்.













