தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனத்தின் 05 ஆவது பாடநெறிக்கான வரவேற்பு விரிவுரையை கடற்படைத் தளபதி நிகழ்த்தினார்
கொழும்பு தேசிய பாதுகாப்புக் கற்கை நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்கவின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்புக் கற்கை நிறுவனத்தின் ஐந்தாவது (05) தேசிய பாதுகாப்புப் பாடநெறியைத் தொடர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முப்படைகள் மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்காக, ‘Preserving Sovereignty, Protecting Prosperity and Remaining Strategically Relevant in a Turbulent World’ என்ற சமகாலத்திற்குப் பொருத்தமான கருப்பொருளின் கீழ் இன்று (2026 நவம்பர் 04) வரவேற்பு விரிவுரையொன்றை நிகழ்த்தினார்.
கடற்படைத் தளபதியினால் நிகழ்த்தப்பட்ட இவ்விரிவுரையின்போது, தற்போதைய சிக்கலான மற்றும் கணிக்க முடியாத உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் இலங்கையின் தேசிய இறைமை, கடல்சார் நலன்கள் மற்றும் பொருளாதாரச் செழிப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை கடற்படைக்கு உள்ள தீர்க்கமான பங்களிப்பு வலியுறுத்தப்பட்டது.அங்கு, நவீன தேசிய பாதுகாப்பு என்பது பாரம்பரிய இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கடற்படைத் தளபதி, தொழில்நுட்ப முன்னேற்றம், இணையவழி அச்சுறுத்தல்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள், எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் போன்ற காரணிகளும் தேசிய பாதுகாப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.அத்துடன், சர்வதேச மோதல்கள் மற்றும் பிரதான கடல்சார் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் தடைகள் காரணமாக, இலங்கை போன்ற சர்வதேச பொருளாதார உறவுகளில் தங்கியுள்ள சிறிய நாடுகள் எதிர்கொள்ளும் அபாயகரமான சூழ்நிலைகள் குறித்தும் கடற்படைத் தளபதி தனது விரிவுரையின் போது தெளிவுபடுத்தினார்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு உரித்தான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் மற்றும் இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு மற்றும் மேற்கு உலக நாடுகளை இணைக்கும் பிரதான சர்வதேச கடல்சார் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு இலங்கை கொண்டுள்ள அண்மித்த அமைவிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய கடற்படைத் தளபதி, இதன் மூலம் துறைமுகச் செயற்பாடுகள், கடல்சார் போக்குவரத்து, விநியோகம் மற்றும் சேவைகள், கடல்சார் சேவைத் துறைகள் ஆகியவற்றில் பாரிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், இவ்வாய்ப்புகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கு வலுவான கடல்சார் பாதுகாப்புச் சூழல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் முறையான தேசியக் கொள்கைகள் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிய நாடுகள் எதிர்கொள்ளும் நான்கு பிரதான மூலோபாய சவால்களாக, தொழில்நுட்ப இடைவெளி விரிவடைதல், வல்லரசுகளுக்கு இடையில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் போட்டித்தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், அத்துடன் தகவல் சூழலில் காணப்படும் இடர்ப்பாடுகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுவதாகச் சுட்டிக்காட்டிய கடற்படைத் தளபதி, இச்சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தொழில்நுட்ப ரீதியான தழுவல், மூலோபாய சுயாதீனம், பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு, அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். குறிப்பாக, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு, இராஜதந்திரம், பொருளாதாரம், தொழில்நுட்பம், சிவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் ஆகிய துறைகளில் சிறந்த ஒருங்கிணைப்புடன் கூடிய ஒட்டுமொத்த அரச பொறிமுறையின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படையின் வகிபாகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் எண்ணிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் செயல்திறனை மதிப்பிடாமல், அவற்றின் மூலம் தேசிய பாதுகாப்புக்கும் கடல்சார் நலன்களுக்கும் கிடைக்கும் உண்மையான மூலோபாயப் பெறுபேறுகளின் அடிப்படையில் கடற்படையின் செயல்திறன் மதிப்பிடப்பட வேண்டும் எனத் தனது விரிவுரையின்போது வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் கடல்சார் அணுகல் வழிகளைப் பாதுகாத்தல், கடல்சார் நிலைமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், கடல்சார் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளித்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குதல், அத்துடன் சர்வதேச கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பான சூழலைப் பேணுதல் ஆகியவற்றைக் கடற்படையின் பிரதான பொறுப்புகளாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குத் தேவையான தொடர்ச்சியான பயிற்சி, கப்பல்கள் மற்றும் உபகரணங்களை முறையாகப் பராமரித்தல், தொழில்சார் தலைமைத்துவம், வளங்களை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்தல், ஒன்றிணைந்து செயற்படும் ஆற்றல்களை மேம்படுத்துதல் மற்றும் அனுபவங்களின் ஊடாகத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் நம்பகமான செயல்பாட்டுத் தயார்நிலையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் கடற்படைத் தளபதி இதன்போது வலியுறுத்தினார்.
பிரதான கடற்படை வல்லரசுகளின் அளவு அல்லது திறன்களைப் பின்பற்றுவது இலங்கை கடற்படையின் நோக்கமாக இருக்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக நாட்டின் மூலோபாயத் தேவைகளுக்குப் பொருத்தமான தொழில்சார் நிபுணத்துவம், வினைத்திறன் மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கடற்படையைக் கட்டியெழுப்புவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார். தேசிய இறைமையைப் பாதுகாத்தல், கடல்சார் நலன்களை உறுதிப்படுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு பங்களித்தல் ஆகியவையே கடற்படையின் உண்மையான வலிமையை அளவிடுவதற்கான அளவுகோல்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு அப்பாற்பட்ட மூலோபாயத் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக இலங்கைக்குத் தேவையான கடற்படையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி தனது விரிவுரையை நிறைவு செய்தார்.
மேலும், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் தேசிய பாதுகாப்புக் கற்கை நிறுவனத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.













