EVENT NEWS › 2026

கட்டளைகளுக்கிடையிலான தரைநிலை போர் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

16 Nov 2026

கட்டளைகளுக்கிடையிலான தரைநிலை போர் போட்டித் தொடரானது, 2026 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், இப்போட்டித் தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வடமத்திய கடற்படை கட்டளை தனதாக்கிக் கொண்டது.

அதற்கமைய, இப்போட்டித் தொடரில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 161 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன்போது, சிறப்பு நடவடிக்கைக் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில், உடற்தகுதி மற்றும் சகிப்புத்தன்மை, களச் செயற்பாட்டுத் திறன் மற்றும் அடிப்படை போர் உத்திகள், போர் துப்பாக்கிச் சூடு ஆகிய பிரிவுகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய வடமத்திய கடற்படை கட்டளை, 2026 ஆம் ஆண்டுக்கான தரைநிலை போர் போட்டித் தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டதுடன், மேற்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதேவேளை, அடிப்படை தரைநிலை போர் பயிற்சியைப் பெற்றுவரும் பயிற்சி பெறும் கடற்படையினரின் (OJT) குழுக்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில், உடற்தகுதி, களச் செயற்பாட்டுத் திறன் மற்றும் அடிப்படை போர் உத்திகள், போர் துப்பாக்கிச் சூடு ஆகிய பிரிவுகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய வடமத்திய கடற்படை கட்டளை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், தெற்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இப்போட்டித் தொடரில், சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் கீழ் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெடி ஒபிசர் எச்ஆர்ஐபிஎஸ் ஹபுவிட்ட தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை, அடிப்படை தரைநிலைப் போர் பயிற்சியைப் பெற்றுவரும் பயிற்சி பெறும் கடற்படையினருக்கான பிரிவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராக தென்கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓடினரி சீமன் வைஎம்என்எம் சந்திரசேகர தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், இப்போட்டித் தொடருக்கான பரிசளிப்பு விழா, வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கடற்படை காலாட்படைப் பணிப்பாளர் கொமடோர் விராஜ் தங்கம்பல மற்றும் கடற்படை காலாட்படைப் பிரதிப் பணிப்பாளர் கெப்டன் சுமேத ஹிட்டிநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools