இந்தியாவில் காலமான லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோனின் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது
‘BIMSTEC – 2026’ கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு கப்பலில், சிரேஷ்ட மின் மற்றும் மின்னணுப் பொறியியல் அதிகாரியாகப் பணியாற்றிய லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோன், திடீர் சுகவீனம் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலுள்ள ஸ்ரீ விஜயபுரம் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2026 நவம்பர் 02 ஆம் திகதி காலமானார்.
அதன்படி, லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோனின் பூதவுடலுக்கு இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அசோக வீரசேகர உள்ளிட்ட கப்பலின் அங்கத்தவர்கள் மற்றும் இந்திய கடற்படையினர் இறுதி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் 2026 நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
2006 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி, 45 ஆவது கெடட் ஆட்சேர்ப்பின் கீழ் இலங்கை கடற்படையில் இணைந்த லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோன், தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர், 2008 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி சப் லெப்டினன்ட் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையின் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் பிரிவின் அதிகாரியாகப் பல்வேறு கடற்படைக் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் கடமையாற்றிய அவர், தனது சேவைக் காலத்தில் படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற்று, 2024 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி லெப்டினன்ட் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப்பட்ட இலங்கை கடற்படையின் திறமையான அதிகாரியாவார்.
காலமான லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோனின் பூதவுடலைத் துரிதமாக இலங்கைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அவரது பணிக்குழுவினருக்கும், இந்திய கடற்படையினருக்கும், இந்திய விமானப்படையினருக்கும், குறித்த அதிகாரிக்கு ஸ்ரீ விஜயபுரம் நகரில் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் இலங்கை கடற்படை தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும், லெப்டினன்ட் கமாண்டர் சமீர சமரகோனின் மறைவையிட்டு, இலங்கை கடற்படை அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், குறித்த அதிகாரியின் இறுதிக் கிரியைகள் கடற்படையின் முழுமையான இராணுவ மரியாதையுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.













