EVENT NEWS › 2026

76 ஆவது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு வெலிசரவில் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படையினரின் நட்புரீதியான ஒன்றுகூடல்

06 Nov 2026

இலங்கை கடற்படையின் பெருமைக்குரிய 76ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படையினரின் நட்புரீதியான ஒன்றுகூடல், இன்று (2026 நவம்பர் 06) வெலிசரவில் அமைந்துள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதன்படி, இலங்கை கடற்படையின் கலாசார இசை மற்றும் நடனக் குழுவினரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளால் இந்த நட்புரீதியான ஒன்றுகூடல் சிறப்பிக்கப்பட்டதுடன், ஓய்வுபெற்ற கடற்படையினர் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த சேவையிலுள்ள சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர்களுக்கு தங்களது சேவைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் இதன்போது வாய்ப்புக் கிடைத்தது.

இதன்போது உரையாற்றிய கடற்படைத் தளபதி, 1950ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கடற்படை, தாய்நாட்டின் இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 76 ஆண்டுகளாக தனித்துவமான சேவையை ஆற்றி வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது ‘கடற்படை மூலோபாயத் திட்டம் 2030 மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், எதிர்கால கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றல்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முறைத் திறன்களைக் கொண்ட மனிதவளத்தை மேம்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரிய கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வரும் இலங்கை கடற்படை, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கைகள் மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 114 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதில் கடற்படை வெற்றியடைந்துள்ளதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார். மேலும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகளை வழங்குவதிலும் முன்னின்று செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடற்படையினரின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், திருமணமான கடற்படையினருக்கான வீடமைப்புப் பிரச்சினை உள்ளிட்ட நலன்புரிப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடற்படையின் செயற்பாட்டுத் தயார்நிலையைத் தொடர்ச்சியாகப் பேணுதல், அதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற கடற்படையினர் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை தனது எதிர்கால நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் செழிப்பான கடற்பிராந்தியத்தைப் பேணுவதற்காக அனைத்து கடற்படை உறுப்பினர்களினதும் அதிகபட்ச பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படை ப்ளீட் சீப் பெட்டி ஒபிசர் ஏஎச்டி வீரதுங்க, ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படையினர் சார்பில் ப்ளீட் சீப் பெட்டி ஒபிசர் ஆர்சிகே ஹெட்டியாராச்சி (ஓய்வு) மற்றும் வுமன் ப்ளீட் சீப் பெட்டி ஒபிசர் யூஎஸ் ரொட்ரிகோ (ஓய்வு) ஆகிய சிரேஷ்ட கடற்படை உறுப்பினர்கள் இந்த நட்புரீதியான ஒன்றுகூடலில் உரையாற்றி, தமது சேவைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், தற்போதைய கடற்படையினரையும் ஊக்குவித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படையினர், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் மற்றும் பெண் கடற்படை வீராங்கனைகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools