இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 265 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 323 பயிற்சி கடற்படையினர் பூனேவையில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறினர்
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 265 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தரப் பயிற்சி கடற்படையினர் முந்நூற்று ஒருவர் (301) மற்றும் தன்னார்வ பயிற்சி கடற்படையினர் இருபத்திருவர் (22) உள்ளிட்ட மொத்தம் முந்நூற்று இருபத்துமூன்று (323) பயிற்சி கடற்படையினர் தமது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, 2026 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பூனேவ, இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் கட்டளை அதிகாரியும் தளபதியுமான கெப்டன் கெளும் மாரபகே அவர்களின் அழைப்பின் பேரில், கடற்படை பிரதி பிரதான அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த வெளியேறிச் செல்லும் அணிவகுப்பு நிகழ்வின்போது, ஷிக்ஷா பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்பட்ட கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளின் போது சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்திய பயிற்சி கடற்படையினருக்கான வெற்றிக் கிண்ணங்களை பிரதம அதிதி வழங்கினார். அதன்படி, 265 ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய 323 பயிற்சி கடற்படையினரில், சிறந்த பயிற்சி கடற்படையினருக்கான வெற்றிக் கிண்ணத்தை பயிற்சி கடற்படை வீராங்கனை ஆர்எஸ் கித்தவகே பெற்றுக்கொண்டார். மேலும், அனைத்து பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பயிற்சி கடற்படை வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீரர் ஆர்பிஎஸ் கருணாரத்னவும், சிறந்த விளையாட்டு வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீரர் எஸ்ஜிஜிகே விஜேரத்னவும் பெற்றுக்கொண்டனர். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீராங்கனை கேடப்பிஏஐ சந்தமாலியும், சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரருக்கான வெற்றிக் கிண்ணத்தைப் பயிற்சி கடற்படை வீரர் எம்பிஜிசிஎன் பெத்தேவெலகேவும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், 265 ஆவது பயிற்சி ஆட்சேர்ப்பில் சிறந்த பிரிவுக்கான வெற்றிக் கிண்ணத்தை ‘சயுரள’ பிரிவு பெற்றுக்கொண்டது.
இதன்போது, பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய பயிற்சி கடற்படையினரை உரையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, 265 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த பயிற்சி கடற்படையினருக்கு முதலில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடற்படையில் இணையும் பயிற்சி கடற்படையினரின் கல்வி, தொழில்சார் அல்லது சமூக அடையாளங்கள் எதுவாக இருந்தாலும், பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய பின்னர் இலங்கை கடற்படையின் உறுப்பினர்களாக அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை உலகம் உன்னிப்பாகக் கவனிக்கும் எனக் குறிப்பிட்டார். எனவே, இலங்கை கடற்படையின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல் கட்டமைப்புகள், கண்காணிப்புத் தொழில்நுட்பம், தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன கடல்சார் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் மாற்றமடைந்து வரும் கடற்படையின் செயல்பாட்டுச் சூழலில் கடமையாற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொண்டு, அந்த அறிவைச் சரியான முறையில் பயன்படுத்தி, பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் பயிற்சி கடற்படையினர் கடற்படையின் எதிர்காலத்தை உருவாக்கும் தலைமுறையாகத் திகழ வேண்டும் என ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே வலியுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது கடற்படையின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், கடற்படை உறுப்பினர்களாக ஒழுக்கம், சட்டத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் பொறுப்புணர்வு ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி கடமையாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் பயிற்சி கடற்படையினருக்கு, எதிர்காலத்தில் இலங்கையைச் சூழவுள்ள பரந்த கடல்சார் பிராந்தியத்தில் நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கடல் வழியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுத்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கடலில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குதல், இயற்கை அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் போன்ற பரந்துபட்ட செயற்பாடுகளில் எதிர்காலத்தில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் பயிற்சி கடற்படையினர் பங்களிப்புச் செய்வார்கள் என்றும், அத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவம், அறிவு, திறன்கள், ஒழுக்கம், நேர்மை மற்றும் குழு உணர்வு ஆகியவற்றைத் தமது தொழில் வாழ்க்கையின் முக்கிய பலங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் பெண் பயிற்சி கடற்படையினருக்கும் சமமான தொழில்சார் வாய்ப்புகளும் பொறுப்புகளும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தமது திறமைகள் மீது நம்பிக்கை வைத்து, ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், பயிற்சி கடற்படையினர் கடற்படையில் இணைவதற்கு ஊக்கமளித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அவர்களது பெற்றோருக்கு தனது கௌரவமிக்க நன்றியைத் தெரிவித்த ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, பெருமைமிக்க வெளியேறும் அணிவகுப்பை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும், வடமத்திய கடற்படைக் கட்டளையின் தளபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
பயிற்சி கடற்படையினரின் வெளியேறும் இரவு அணிவகுப்பில் முதன்முறையாக நடத்தப்பட்ட பரசூட் சாகசக் காட்சியும் இவ்வெளியேறும் அணிவகுப்பின்போது இடம்பெற்றது. இந்தப் பரசூட் சாகசக் காட்சியில் சிறப்புப் படகுப் படைப்பிரிவின் கொமாண்டர் திஸ்ஸ குமார மற்றும் ப்ளீட் சீப் பெடி ஒபிசர் கேசிஎம்கே கீகியனகே ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன், 265 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் பயிற்சி கடற்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற கண்கவர் சாகச அணிவகுப்பு, கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார நடனக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், கடற்படை அங்கம்ஹரப அணியினரின் சாகசங்களுடன் இவ்வணிவகுப்பு மேலும் சிறப்பிக்கப்பட்டது.இறுதியாக, பாரம்பரிய சூரிய அஸ்தமன நிகழ்வைத் தொடர்ந்து இந்த வெளியேறும் அணிவகுப்பு நிறைவடைந்தது.
மேலும், இந்த வெளியேறும் அணிவகுப்பில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் இந்திக த சில்வா, கடற்படை நபர்கள் பணிப்பாளர் கொமடோர் மனோஜ் லீலாரத்ன உள்ளிட்ட கடற்படைத் தலைமையக மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள், இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் பயிற்சி நிர்வாக அதிகாரி கொமாண்டர் கசுன் நுவரபக்ஷ உள்ளிட்ட வடமத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், விருந்தினர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் மற்றும் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய பயிற்சி கடற்படையினரின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.













