COs Conclave – 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது

16 Oct 2026

2026 ஆம் ஆண்டிற்கான கடற்படையின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கட்டளை அதிகாரிகளுடன், கடற்படைத் தளபதி வருடாந்தம் நடத்தும் விசேட கலந்துரையாடலான COs Conclave – 2026, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில், கடற்படை பிரதம அதிகாரி, பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன், இன்று (2026 ஒக்டோபர் 16) கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, பாதுகாப்பான, அமைதியான மற்றும் செழிப்பான கடற்பிராந்தியத்தைப் பேணுவதற்கான தேசிய கடல்சார் இலட்சியத்தை அடைவதற்காக, இலங்கை கடற்படையின் அனைத்துப் பிரிவுகளையும் அதிகபட்ச வினைத்திறனுடனும் செயல்திறனுடனும் இயங்கச் செய்வதற்குத் தேவையான தந்திரோபாய, செயற்பாட்டு மற்றும் மூலோபாய மட்டத்திலான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் குறித்தும், கட்டளை அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கட்டளை அதிகாரிகளின் செயற்பாட்டு அனுபவங்கள் குறித்தும் இவ்விசேட கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், மாறிவரும் செயற்பாட்டுச் சூழலில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் சவால்கள், கடற்படையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், அத்துடன் சட்டக் கட்டமைப்பு தொடர்பாக கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை முகாமைத்துவ சபையுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு இவ்விசேட கலந்துரையாடலில் பங்கேற்ற கடற்படைப் படைப்பிரிவுகள், 4ஆவது விரைவுத் தாக்குதல் படகுகள் படைப்பிரிவு, கடலோரக் காவல்ப்படைத் திணைக்களத்தின் ரோந்துப் படகுகள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், வருடாந்தம் நடைபெறும் இவ்விசேட கலந்துரையாடலின் மூலம், கடற்படையின் செயற்பாட்டு நோக்கங்களுக்கு அமைவாக, கடலோரக் காவல்ப்படை திணைக்களத்தின் படகுகள் உள்ளிட்ட கப்பற்படை மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டுத் தயார் நிலையைத் தொடர்ச்சியாகப் பேணுவதையும் கடற்படை எதிர்பார்க்கிறது.

Accessibility Tools