கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதை வலுவூட்டுவதற்காக கடற்படை, அரச நிறுவனங்கள் மற்றும் கற்பிட்டி பிரதேச மீனவ சமூகம் ஒன்றிணைகின்றன
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல் வழியாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக கற்பிட்டி பிரதேச மீனவ சமூகத்தினரை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சியொன்று, புத்தளம் மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கற்பிட்டி பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதற்கமைய, கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மீன்பிடிக்கான அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பொறிமுறையை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வூட்டுவதே இவ்விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புத்தளம் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி), கற்பிட்டி பிரதேச செயலாளர், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர், கற்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் மஹெஷ் குலசிறி உள்ளிட்ட வடமெற்கு கடற்படை கட்டளையின் கட்டளை அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், வனப் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல், வனவிலங்கு, கரையோரப் பாதுகாப்பு, மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.













