EVENT NEWS › 2026

சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கடற்படை, அரச நிறுவனங்கள் மற்றும் திருகோணமலை மீனவர்கள் ஒன்றிணைவு

06 Oct 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல்சார் சூழலுக்கும், சுற்றுலாத்துறைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் கிழக்கு மாகாண மீனவ சமூகத்தை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்வொன்று, கடற்படை பிரதி பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இன்று (2026 ஒக்டோபர் 06) திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதன்படி, கிழக்குக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தரநிலையான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக கடல் சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், இச்சட்டவிரோத மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும், நடைமுறையில் உள்ள சட்டரீதியான கட்டமைப்பு குறித்தும் மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், சட்டபூர்வமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இந்நிகழ்வின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மீன்பிடி பணிப்பாளர்கள், மீன்பிடி பரிசோதகர்கள் மற்றும் மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக, இலங்கை கடற்படை, அரச நிறுவனங்கள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், கடல் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான மீனவ சமூகத்தினரின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

Accessibility Tools