EVENT NEWS › 2026

கடற்படைத் தளபதியின் தெற்கு கடற்படை கட்டளைக்கான கண்காணிப்பு விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

20 Oct 2026

தெற்கு கடற்படை கட்டளையில் இரண்டு நாள் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் மற்றும் அக்கட்டளையின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள், நிர்வாக நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணித்தார். அத்துடன், இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நோக்கம் தொடர்பாக அக்கட்டளைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு விளக்கமளித்ததைத் தொடர்ந்து, இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 20) அவரது கண்காணிப்பு விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன்படி, இன்று (2026 ஒக்டோபர் 20) இலங்கை கடற்படைக் கப்பல்களான தக்ஷிண மற்றும் நிபுண ஆகிய நிறுவனங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தில் கடற்படைத் தளபதி, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுருத்த கருணாதிலக்க, நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன,தெற்கு கடற்படை கட்டளையின் பிரதி கட்டளைத் தளபதி கொமடோர் அருண வீரசிங்ஹ மற்றும் குறித்த கட்டளையின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின்போது, தெற்கு கடற்படை கட்டளையின் விநியோகம் மற்றும் சேவைகள் திணைக்களம், கடற்படை தையல் நிலையம் மற்றும் மோட்டார் வாகனப் பொறியியல் பணிமனை ஆகியவற்றைக் கடற்படைத் தளபதி பார்வையிட்டார். இதன்போது, குறித்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறமையாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார். அத்துடன், கடற்படை தையல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உயர் தரத்தைப் பேணுவதற்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படைக் கப்பலான நிபுண நிறுவனத்திற்கு விஜயம் செய்த கடற்படைத் தளபதி, அந்நிறுவனத்தின் பயிற்சி வசதிகளைப் பார்வையிட்டார். இதன்போது, பயிற்றுவிப்பாளர் குழுவின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட கடற்படையினருக்கு உயர்தரத்திலான பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், பயிற்சி பெறுவோரின் தந்திரோபாய அறிவு, மாறிவரும் செயற்பாட்டுச் சூழல் குறித்த புரிதல் மற்றும் சரியான செயற்பாட்டு முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பயிற்சித் தரங்களை உயர்த்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், கடற்படையினர் மற்றும் பெண் கடற்படையினரின் சிறந்த ஒழுக்கத்தையும் நடத்தையையும் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதில் பயிற்றுவிப்பாளர் குழுவினருக்குச் சிறப்புப் பொறுப்பு உள்ளதாகவும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.

மேலும், கடற்படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷிண நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நலன்புரிப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், படகுப் பிரிவின் கண்காணிப்பு விஜயத்திலும் கலந்துகொண்டார். இதன்போது, படகுப் பிரிவின் செயற்பாட்டுத் தயார்நிலையைத் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை கடற்படைத் தளபதி வழங்கினார்.

தேசிய பாதுகாப்புடன் இணைந்த வகையில் தேசிய அபிவிருத்திக்காக கடற்படை ஆற்றிவரும் விரிவான பங்களிப்பை, கடற்படைத் தளபதியின் தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்கான கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் வலியுறுத்தினார். அதற்கமைய, கடற்படையின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துதல், நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் பயனுள்ள வகையிலும் முன்னெடுத்தல், அத்துடன் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை உகந்த மட்டத்தில் பேணிப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துக் கடற்படைப் வீரர்களினதும் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.

Accessibility Tools