EVENT NEWS › 2026

கடற்படைத் தளபதி தெற்கு கடற்படை கட்டளைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்

19 Oct 2026

தெற்கு கடற்படை கட்டளைக்கு இரண்டு (02) நாள் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்வதற்காக இன்று (2026 ஒக்டோபர் 19) வருகை தந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, அக்கட்டளையின் செயற்பாடுகள், நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அபிவிருத்திக்காக கடற்படையின் பங்களிப்பு மற்றும் செயற்பாட்டு நோக்கம் தொடர்பாக அக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளைக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை, அக்கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுருத்த கருணாதிலக்க, நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, தெற்கு கடற்படை கட்டளையின் நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளுக்கு கடற்படைத் தளபதி விஜயம் மேற்கொண்டார். தெற்கு கடற்படை கட்டளைக்கான கண்காணிப்பு விஜயத்தை ஆரம்பித்து, இலங்கை கடற்படைக் கப்பலான காவந்திஸ்ஸ நிறுவனத்தின் கீழ் கிரிதியோயா கடற்படைப் பிரிவில் அமைந்துள்ள விவசாயத் திட்டம், ‘சித் சவிய’ மேலதிக சிகிச்சை நிலையம் மற்றும் கடற்படை விடுமுறை மையம் ஆகியவற்றைப் பார்வையிட்ட கடற்படைத் தளபதி, அங்கு மேற்கொள்ளப்படும் நிர்வாக மற்றும் நலன்புரிப் பணிகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அமதூவ கடற்படை உப பிரிவில் அமைந்துள்ள ரேடார் நிலையத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்ட கடற்படைத் தளபதி, அப்பிரிவில் புதிதாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்பையும் திறந்து வைத்தார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின்போது, கிரிந்த மாலிமா சுழியோடல் மையத்தைப் பார்வையிட்ட கடற்படைத் தளபதி, அப்பகுதியில் சுழியோடல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், அந்த மையத்தின் நிகழ்ச்சித் திட்டங்களைப் புதிய அணுகுமுறையுடன் மறுசீரமைப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த விஜயத்தின்போது, கடற்படைத் தளபதி ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பலான காவந்திஸ்ஸ நிறுவனத்தில் நிறுவப்பட்டு வரும் சூரிய மின்சக்தி கட்டமைப்பு மற்றும் வாகனங்களை ஏற்றுதல், இறக்குதல் ஆகியவற்றுக்கான நிலையம் ஆகியவற்றின் முன்னேற்றத்தைப் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து, கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு துணை நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்ட கடற்படைத் தளபதி, அதன் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

மேலும், தங்கல்ல இலங்கை கடற்படைக் கப்பல் ருஹுண நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி, அந்நிறுவனத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், நலன்புரி மற்றும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார். இதன்போது, கடற்படை விடுமுறை மையம் மற்றும் சேவாவனிதா விற்பனை வளாகம் மூலம் கடற்படைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி வசதிகளையும், தங்கல்ல மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். அத்துடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடன் தங்கல்ல சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி அவர்கள், இலங்கை கடற்படைக் கப்பல் தக்ஷிண நிறுவனத்தின் கீழ் இயங்கும் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புக் குழுக்களுக்கு (Onboard Security Team - OBST) வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளின் பொருட்டு, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் களஞ்சியப்படுத்தப்படும் காலி, பெட்டிகலவத்த ஆயுதக் களஞ்சிய வளாகத்தைப் பார்வையிடுவதற்காக சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து சென்றார்.இதன்போது, குறித்த வளாகத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.

மேலும், கடற்படைத் தளபதியின் இந்தத் தெற்கு கடற்படை கட்டளைக்கான கண்காணிப்பு விஜயத்தில், அக்கட்டளையின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools