கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திஸ்ஸமஹாராமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள எல்லகல ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட ஒரு (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2026 ஒக்டோபர் 12) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லகல ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்களின் அன்றாட நீர்த் தேவைகள் லுணுகம்வெஹெர நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட்டு வந்தபோதிலும், சிறுநீரக நோயாளர்கள் பதிவாகும் இப்பகுதி மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குவது பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வந்தது.
அதற்கமைய, இத்தேவையை அடையாளம் கண்டு, சுகாதார அமைச்சின் தலைமையில், இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடனும், பெரேரா அன்ட் சன்ஸ் (Perera & Sons Bakers Pvt Ltd) தனியார் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடனும், எல்லகல ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.இதன் மூலம், திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லகல ஆரம்பப் பாடசாலை மாணவ, மாணவியர்கள் மட்டுமன்றி, அப்பகுதியைச் சூழ்ந்து வாழும் பெருமளவிலான மக்களுக்கும் தங்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் இதுவரை 1,162 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.













