EVENT NEWS › 2026

திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தில் உள்ள பெல்ப்ரி நுழைவாயிலில் மீள்நிறுவப்பட்ட கோபுரம் திறந்து வைக்கப்பட்டது

31 Oct 2026

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தில் அமைந்துள்ள பெல்ப்ரி நுழைவாயிலின் (Belfry Gate) இடதுபுறக் கோபுரம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு, அதனைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (2026 ஒக்டோபர் 31) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தின் மிகவும் தனித்துவமான கட்டிடக்கலை அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ‘பெல்ப்ரி’ (Belfry) நுழைவாயில், 1821 ஆம் ஆண்டு பிரித்தானிய ராயல் கடற்படையினரால், இரண்டு கோபுரங்களைக் கொண்ட வகையில் ராயல் கடற்படை கப்பல்தளத்தின் பிரதான நுழைவாயிலாக நிர்மாணிக்கப்பட்டது.

‘பெல்ப்ரி’ (Belfry) என்ற பெயர், மணியைப் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கோபுரம் அல்லது கட்டமைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் கடற்படைச் சூழலில், நேரத்தை அறிந்துகொள்வதற்கும், அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் மணிகள் முக்கியமான கருவிகளாக விளங்கின. திருகோணமலையில் அமைந்துள்ள இந்த ‘பெல்ப்ரி’ கட்டமைப்பானது, ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக கடற்படையினர் மற்றும் கப்பல்தளப் பணியாளர்களுக்கு நேரத்தை அறிவிக்கும் இடமாகச் செயற்பட்டு வந்துள்ளது.

காலப்போக்கில், ஆரம்பத்தில் காணப்பட்ட இரட்டைக் கோபுரங்களில் ஒன்று இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து, இலங்கை கடற்படையினால் முன்னர் காணப்பட்ட இரண்டாவது கோபுரத்தை மீள்நிர்மாணிக்கும் பணிகள், அசல் கட்டமைப்பின் கட்டிடக்கலை வடிவமைப்பு, விகிதாசாரங்கள் மற்றும் தனித்துவமான அம்சங்கள் குறித்து மிக நுணுக்கமாக ஆய்வு செய்த பின்னர் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம், ‘பெல்ப்ரி நுழைவாயிலின்’ (Belfry Gate) வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைக் கோபுரத் தோற்றம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு கட்டிடக்கலை அம்சமாக மட்டுமன்றி, கடற்படை ஒழுக்கம், நேரம், பாரம்பரியம் மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றின் உயிரோட்டமான அடையாளமாகவும் விளங்குகிறது. அத்துடன், இலங்கையின் கடல்சார் மரபுரிமையின் முக்கியமான ஒரு பகுதியை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைப்பதற்கும் இந்நடவடிக்கை பங்களிப்புச் செய்கிறது.

மேலும், இந்நிகழ்வில் கடற்படைப் பிரதிப் பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, கடற்படை கப்பற்படை கட்டளையின் கொடி அதிகாரியான ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ, ஏனைய கொடி அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல்தளத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools