உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் நாட்டிலிருந்து புறப்பட்டன
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள், தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இடம்பெற்ற கூட்டுப் பயிற்சியைத் தொடர்ந்து, இன்று காலை (2026 ஒக்டோபர் 29) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றன.
இந்தக் கப்பல்கள் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள், இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகள், கப்பல்களின் செயற்பாட்டுத் திறனை அவதானிக்கும் விஜயங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அத்துடன், இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.
மேலும், இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்களும் இலங்கை கடற்படையும் இணைந்து கூட்டுப் பயிற்சியொன்றை முன்னெடுத்தன. இப்பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பலான நந்திமித்ர மற்றும் P 492 அதிவேகத் தாக்குதல் படகு ஆகியவை பங்கேற்றன. இதன்போது, கப்பல்களுக்கிடையில் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், கப்பல்களைப் போர்த்தந்திர அணிவகுப்புகளில் நகர்த்துதல் மற்றும் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, கப்பல்களுக்கிடையிலான மரியாதை பரிமாற்றப் பயிற்சியுடன் கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மேலும், இவ்வாறான உத்தியோகபூர்வ விஜயங்கள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் மூலம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய தொழில்சார் அறிவு, அனுபவங்கள், வலுப்பெறும் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதிறன் ஆகியவற்றின் ஊடாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் பொதுவான கடல்சார் சவால்களுக்கு இரு நாடுகளின் கடற்படைகளும் கூட்டாகவும் வெற்றிகரமாகவும் பதிலளிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ள முடியும்.













