EVENT NEWS 2026

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு கௌரவமளிப்பு

09 Sep 2026

வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் 27-வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றமையைப் பாராட்டி, அக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு 2026 செப்டம்பர் 09 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கமைய, புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை, அதிபர் வணக்கத்திற்குரிய பிரியஞ்ஜீவ குணரத்ன ஆயர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றதனைத் தொடர்ந்து, புனித ஜோசப் வாஸ் உருவச்சிலைக்குக் கடற்படைத் தளபதி மலரஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், கல்லூரியின் மாணவச் சிப்பாய் படைப்பிரிவினால் கடற்படைத் தளபதிக்கு மரியாதை அளிக்கப்பட்டதுடன், கல்லூரியின் பேண்ட் வாத்திய குழுவின் நயமிக்க இசை முழக்கத்துடன் கடற்படைத் தளபதி கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, கடற்படைத் தளபதிக்கு இறை ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்திக்கப்பட்டு, கௌரவப் பாடல்கள் பாடப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கான வரவேற்புரையை அதிபர் வணக்கத்திற்குரிய பிரியஞ்ஜீவ குணரத்ன ஆயர் நிகழ்த்தினார். மேலும், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. மல்ராஜ் பலபிட்டிய அவர்களினாலும், முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் திருமதி. ஷிமாலி பெர்னாண்டோ அவர்களினாலும், புனித ஜோசப் வாஸ் ஆரம்பப் பிரிவின் அதிபர் வணக்கத்திற்குரிய அமல் பிரசன்ன பெரேரா ஆயரினாலும் உரைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி கல்லூரியின் மாணவர்கள் உள்ளிட்ட சபையினருக்கு உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றமைக்காகத் தமக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், புனித ஜோசப் வாஸ் தாய் பாடசாலைக்கு மீண்டும் வருகை தந்தது சொந்த வீட்டிற்குத் திரும்பியது போல் உணர்வதாகத் தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பயமின்றி கனவு காணுமாறு கேட்டுக்கொண்டதுடன், உண்மையான நற்பண்பு என்பது பிரம்மாண்டமான தருணங்களில் கட்டியெழுப்பப்படுவதில்லை என்றும்; மாறாக நேர்மை, ஒழுக்கம், பணிவு மற்றும் தோல்விக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற முயற்சிக்கும் தைரியம் போன்ற எண்ணற்ற சாதாரணமான தீர்மானங்களின் மூலமே உருவாகிறது என்றும் வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்பிற்காக மட்டுமன்றி, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தாயகத்திற்கு பெருமை சேர்க்க "Domino Pro Patria" என்ற புனித ஜோசப் வாஸ் பாடசாலையின் உன்னதமான வாசகத்திற்கு ஏற்ப வாழுமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொண்ட கடற்படைத் தளபதி, போதைப்பொருள் அச்சுறுத்தல் எதிர்கால சந்ததியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், அந்த ஆபத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்குமாறும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கான முதலாவது அழைப்பையே நிராகரிக்குமாறும் வலியுறுத்திய அவர், போதைப் பொருளுக்கு அடிமையான நண்பர்கள் யாரேனும் இருந்தால், அதிலிருந்து மீண்டு வருவதற்கு அந்த நண்பர்களுக்கு உதவுமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, தமது பிள்ளைகளின் தனித்துவமான திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்த்தெடுக்குமாறும், அவர்களின் தவறுகள் மற்றும் குறைபாடுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்குமாறும், தோல்வியைக் கண்டு பயப்படவேண்டாம் என்றும், தாங்கள் எத்தகைய நிலையிலிருந்து வந்தோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திய கடற்படைத் தளபதி, ஜோசப் வாஸ் மாணவர்களின் இன்றைய தெரிவுகளே நாட்டின் நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும், அவர்கள் எப்போதும் பெருமையோடும் நோக்கத்தோடும் தமது தாய்நாட்டிற்குச் சேவையாற்ற ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் கல்லூரி வளாகத்தில் சந்தனக் கன்று ஒன்று நடப்பட்டதுடன், இந்த கௌரவிப்பு நிகழ்வில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியில் பயின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள், தற்பொழுது சேவையிலுள்ள கடற்படை உள்ளிட்ட சகோதர படைகளின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Accessibility Tools