விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் தகுதிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 33 கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன
கடற்படையின் விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் முப்பதாவது (30) தகுதிப் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மூன்று (03) அதிகாரிகள் மற்றும் முப்பது (30) கடற்படை வீரர்களுக்குச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இன்றைய தினம் (2026 செப்டம்பர் 06) புத்தளம், கங்கேவாடியிலுள்ள விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் தலைமையகப் பிரதான அணிவகுப்பு மைதானத்தில், அப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி கெப்டன் ரங்கநாத் வீரசேகர மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில், கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில் நடைபெற்றது.
ஆறு (06) மாத காலத்தைக் கொண்ட விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் முப்பதாவது (30) தகுதிப் பயிற்சி நெறியின் போது, சிறிய படகுச் செயல்பாடுகள் குறித்தும், அவசர மற்றும் இயற்கை பேரிடர் சூழ்நிலைகளின் போது மனிதநேய உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பிலும் சிறந்த செய்முறை மற்றும் கோட்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய, இந்தச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வின் போது, பயிற்சி காலத்தில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான சிறப்பு விருதுகள் கடற்படையின் பிரதம அதிகாரியினால் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, சிறந்த படகுச் செலுத்துனர் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுகளை லெப்டினன்ட் ஐடிஎல்எஸ் மதுவாச பெற்றுக்கொண்டதோடு, சிறந்த உயிர்காப்பாளருக்கான விருதை ஏபல் சீமன் சிகேடி சந்திரசேகரவும், சிறந்த உடல்தகுதி கொண்ட பயிற்சியாளருக்கான விருதை ஓடினரி சீமன் டிஎம்ஈவி திசாநாயக்க ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு முதற்கண் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உடனடி விரைவுச் செயற்பாட்டுப் படகுப் படைப் பிரிவின் சிறப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அதிகாரிகளும் கடற்படை வீரர்களும் பெருமைமிக்க வரலாறு, பாரம்பரியம் மற்றும் பாரிய பொறுப்பைக் கொண்ட ஒரு படைப் பிரிவின் உறுப்பினர்களாக இணைகிறார்கள் என்றும், "எல்லையற்ற வெற்றியினை நோக்கி" என்ற விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவின் கருப்பொருளுக்கு அமைய தைரியம், உறுதிப்பாடு, ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் குழு உணர்வு என்பன புதிய உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
போருக்குப் பின் இலங்கை கடற்படையின் பங்களிப்பானது தேசிய பாதுகாப்பிற்குப் பங்களிப்பதற்கு இணையாக, தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பங்களிப்பது வரை விரிவடைந்துள்ளது என்றும்; நாட்டில் ஏற்படும் தேசிய அவசர பேரிடர் சூழ்நிலைகளின் போது ஏனைய சகோதரப் படைகளுடன் இணைந்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மனிதநேய உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைச் செய்தல் மற்றும் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறமையாகவும் பயனுள்ள முறையிலும் நிறைவேற்றுவதற்குப் பயிற்சியின் மூலம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் இதன்போது பிரதம அதிகாரி வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 'டித்வா' பேரிடர் சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விரைவுச் செயற்பாட்டுப் படகுகள் படைப் பிரிவு வழங்கிய பங்களிப்பை இதன்போது நினைவுகூர்ந்த பிரதம அதிகாரி, பயிற்சியின் மூலம் பெற்ற புதிய அறிவுக் கூர்மை மற்றும் திறன்களின் வழியே, அத்தகைய இயற்கை பேரிடர் சூழ்நிலைகளில் மீட்புப் பணிகளுக்காகக் கடற்படைக்குப் பங்களிப்பை வழங்குவதற்குப் பயிற்சியைப் பூர்த்தி செய்த புதிய உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்தச் சிறப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பதற்கு 30ஆவது தகுதிப் பயிற்சி நெறியைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதம அதிகாரி, இக்குழுவினரை வெற்றிகரமாகப் பயிற்றுவிப்பதற்குப் பங்களித்த பயிற்சிப் பயிற்றுநர்கள் குழுவிற்கும் தனது மரியாதையைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வுக்கு இணையாக, தமது பயிற்சியின் மூலம் பெற்ற திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 30ஆவது தகுதிப் பயிற்சி நெறியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், சிறிய படகுகளைப் பயன்படுத்திப் எதிரிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் மனிதநேய உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்தல் தொடர்பான செய்முறை விளக்கப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக இலங்கை விமானப் படையின் பெல் 212 ஹெலிகொப்டர் விமானமொன்றும் இணைத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் மேற் கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா, பயிற்சிகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவன் ரூபசேன, கடற்படை நடவடிக்கைகளுக்கான பதில் பணிப்பாளர் நாயகம் கொமடோர் சமின்த கருணாசேன, வடமேற்கு கடற்படைக் கட்டளை மற்றும் கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், பயிற்சியைப் பூர்த்தி செய்த கடற்படை வீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பிரதேசப் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.













