இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகு இலங்கை கடற்படையினரால் கைது

13 Aug 2026

2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு வேளையில், தலைமன்னார் ஊருமலை முனைக்கு அப்பால் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஒன்பது இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடலடிப் பகுதிக்கு சேதம் விளைவிக்கும் ‘Bottom Trawling’ முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கைப்பற்றப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், மன்னார் தீவு மற்றும் ஆதமின் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் உயிரியல் பல்வகைமை மற்றும் பாதுகாப்புப் பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, இப்பகுதி சிறப்பு மீன்பிடி மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது.

Accessibility Tools