சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன
2026 ஆகஸ்ட் 01 ஆம் மற்றும் 02 திகதிகளில் கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல்களான விஜய மற்றும் தேரபுத்த ஆகிய நிறுவனங்களுக்குக் கிடைத்த நம்பிக்கையான தகவலுக்கு அமைய, கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகத்திற்குரிய பதினைந்து (15) பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அந்த பைகளில் அடைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அறுநூற்று எழுபத்தேழு (677) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் மற்றும் மன்னாரில் உள்ள கலால் துறை அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.













