4.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட 189 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் தெற்கு கடற்பரப்பில் சட்டத்தின் பிடியில்

05 Nov 2026

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 189 கிலோகிராம் 246 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பொதிகள் அடங்கிய பத்து (10) மூட்டைகளைக் கடத்திச் சென்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களுடன் கூடிய பலநாள் மீன்பிடிப் படகும், சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக இன்று (2026 நவம்பர் 05) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளின்போது, 100 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 132 கிலோகிராம் 026 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் 52 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 57 கிலோகிராம் 220 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த போதைப்பொருள் தொகையின் மொத்த வீதிப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய்க்கும் (420 கோடி ரூபாய்) அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் பலநாள் மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்கு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் அருண விஜேவர்தன உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் இணைந்த வகையில், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நோக்கில், கடற்பரப்பை முழுமையாக உள்ளடக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாகத் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், கடற்படையினர் ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, 189 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகையைக் கைப்பற்றி சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படைத் திணைக்களம், ஏனைய படையினர், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோருடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இதன் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கை கடற்படையினர் 75 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்றி சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் விநியோகம் மற்றும் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டங்களை உருவாக்குதல், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சாதனங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், எந்தவொரு வழியிலும் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் ஆகியோர் இந்தக் கொடிய போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, பல நாட்களாக ஆழ்கடல் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மிகுந்த அர்ப்பணிப்புடன் வெற்றிகரமான போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை கடற்படையினர் உள்ளிட்ட, இந்த நடவடிக்கையின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும், கௌரவ ஜனாதிபதி அவர்கள் சார்பாகவும் ஒட்டுமொத்த பொதுமக்கள் சார்பாகவும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தகவல்களைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் இணைந்து, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படைத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், 114 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட ஆபத்தான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளன. அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மாத்திரம் 73 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட ஆபத்தான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Accessibility Tools