‘அர்னாப்’ புயலின் தாக்கத்தினால் கடலில் காணாமல் போன குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்

03 Nov 2026

2026 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ‘ஈகல்’ (IMUL-A-0022-TLE) எனும் பலநாள் மீன்பிடிப் படகு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில், ‘அர்னாப்’ புயலின் தாக்கத்தினால் காணாமல் போன குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களையும் தேடுவதற்காக இலங்கை கடற்படையினரால் கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பயனாக, குறித்த நான்கு (04) மீனவர்களும் இன்று (2026 நவம்பர் 03) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த மீன்பிடிப் படகுடனான தொடர்பாடல் 2026 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக, அப்படகின் உரிமையாளரினால் 2026 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த மீன்பிடிப் படகையும் அதிலிருந்த மீனவர்களையும் கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் உதவியைப் பெற்றுத் தருமாறு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் 2026 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

கடலில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் (UNCLOS), கடலில் மனித உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச சமவாயம் (SOLAS) மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு தொடர்பான சர்வதேச சமவாயம் (SAR) ஆகிய சர்வதேச கடல்சார் சமவாயங்களின் ஊடாக தீவு நாடுகளுக்கு சர்வதேசக் கடப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த சர்வதேசக் கடப்பாட்டிற்கு அமைவாக, அனர்த்தத்திற்கு உள்ளான மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களம், விமானப்படை மற்றும் குறித்த கடற்பிராந்தியத்தில் உள்ள ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கும் அறிவித்து, 2026 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந்த நடவடிக்கைக்காக இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல ஈடுபடுத்தப்பட்டது.

கடற்படையினர், மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருடன் தேவையான தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்த இந்த கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பயனாக, அனர்த்தத்திற்கு உள்ளான நான்கு (04) மீனவர்களுடன் ‘ஈகல்’ (IMUL-A-0022-TLE) எனும் பலநாள் மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்களை கரைக்கு அழைத்து வருவதற்காக, ‘ஈகல்’ பலநாள் மீன்பிடிப் படகு காணப்பட்ட கடற்பிராந்தியத்திற்கு அருகில், இந்த கூட்டு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல கப்பலை அனுப்புவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, குறித்த நான்கு (04) மீனவர்களும் 2026 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி சிதுரல கப்பலில் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான ஆரம்பகட்ட மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டன.

அதன்படி, சிதுரல கப்பல் மூலம் இன்று (2026 நவம்பர் 03) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த மீனவர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கைக்கு இணையாக, 2026 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சலைப் பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று மீண்டும் கரை திரும்பாத மூன்று (03) மீனவர்களைத் தேடி கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, இன்றைய தினமும் (2026 நவம்பர் 03) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Accessibility Tools