இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கடத்த முயன்ற நான்கு (04) கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத் தொகை சட்டத்தின் பிடியில்

18 Nov 2026

இலங்கை கடற்படையினரால் 2026 நவம்பர் மாதம் 17ஆம் திகதி தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் மார்க்கமாகக் கடத்த முயற்சித்த நான்கு (04) கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத்துடன் நான்கு (04) சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமத்திய கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, அக்கட்டளையினரால் பேசாலைப் பகுதிக்கு அப்பால் தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை அவதானித்து சோதனையிட்டபோது, அப்படகில் மணல் நிரப்பப்பட்ட ஒரு (01) சாக்குப் பைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு (01) கிலோகிராம் 410 கிராம் தங்கத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்களும் குறித்த டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும், குறித்த சந்தேகநபர்கள், தங்கத் தொகை மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், அக்கட்டளையினரால் புத்தளம், உச்சிமுனை கடற்பிரதேசத்தை அண்மித்த பகுதியில் 2026 நவம்பர் மாதம் 17ஆம் திகதி இரவு விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அப்படகிலிருந்த எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் மூன்று (03) கிலோகிராம் 25 கிராம் தங்கத்துடன் இரண்டு (02) சந்தேகநபர்களும், குறித்த டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இதன்போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர்கள், தங்கத் தொகை மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தத் தங்கத் தொகையை கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களால் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையின் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை விசேட கவனம் செலுத்தி, தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

Accessibility Tools