கிழக்கு கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மூன்று மீனவர்கள், இலங்கை கடற்படையின் துரித தலையீட்டின் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளான இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகொன்றின் மூன்று (03) மீனவர்கள், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினரால் இன்று காலை (2026 நவம்பர் 09) துரிதமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2026 நவம்பர் 06ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏழு (07) மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற ‘செஷான் புதா 02’ (IMUL-A-1715 MTR) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலையிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மூன்று (03) மீனவர்கள் திடீர் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இலங்கை கடற்படையினர், குறித்த மீனவர்களை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 450 என்ற அதிவேகத் தாக்குதல் படகை அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த மூன்று (03) மீனவர்களும் P 450 படகில் ஏற்றப்பட்ட பின்னர், அவர்களுக்கு அடிப்படை முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு துரித நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.













