கடலில் ஆபத்துக்குள்ளான மீனவர்களைத் தேடி இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்
2026 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத நான்கு (04) மீனவர்களையும், 2026 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சலைப் பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத மூன்று (03) மீனவர்களையும் தேடும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் (2026 நவம்பர் 01) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் இத்தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கடற்பரப்புகளை உள்ளடக்கும் வகையில் தொடர்ந்தும் இந்நடவடிக்கைகள் இடைவிடாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













