மிரிஸ்ஸ, தல்அரம்ப கடற்கரையில் 346 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் தொகை சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படை திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியன இணைந்து, மாத்தறை மிரிஸ்ஸ தல்அரம்ப கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய வகையில், 2026 நவம்பர் 28ஆம் திகதி மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 346 கிலோகிராம் மற்றும் 184 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 17 பொதிகள், ஒரு டிங்கி படகு, இரண்டு வேன்கள் ஆகியவற்றுடன் இரண்டு ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் மிரிஸ்ஸ தல்அரம்ப கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த விசேட கூட்டு நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட 17 பொதிகள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன் இன்று (2026 நவம்பர் 29) மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில், அந்தப் பொதிகளுக்குள் 340 பொதிகளாகப் பொதி செய்யப்பட்ட சுமார் 346 கிலோகிராம் மற்றும் 184 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய, இந்தக் கூட்டு நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகுதியைக் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகு (01) மற்றும் அதனுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் (02), போதைப்பொருள் தொகுதியை ஏற்றிச் செல்வதற்காக வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு (02) வேன்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் (01) ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகுதியை நேரில் பார்வையிடுவதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா, கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கொமடோர் பிரசாத் ஜயசிங்க மற்றும் விமானப்படை, பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினால் தொடர்ச்சியாக தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மாத்தறை, மிரிஸ்ஸ, தல்அரம்ப கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய வகையில் முன்னெடுத்த விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் நான்கு (04) பில்லியன் ரூபா மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட 346 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களம் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலம் மாத்திரம், 120 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக 331,130 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,063 பேர் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும், 5,749 பேர் அவர்களுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் எனவும் தெரிவித்தார். மேலும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்படையை முதன்மையாகக் கொண்ட பாதுகாப்புப் படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட சட்ட அமுலாக்க நிறுவனங்களால் 2,987 கிலோகிராம் ஹெரோயின், 3,760 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 11,341 கிலோகிராம் கஞ்சா, 303 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் சுமார் 300 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பங்களிப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் கெளரவ ஜனாதிபதி அவர்களின் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் சமூகத்தினரைத் தெளிவுபடுத்துவதற்காக ஊடகங்கள் ஆற்றிவரும் பணிகளையும் அவர் பாராட்டினார்.













