சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடத்தல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் 55 நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தம்
இலங்கை கடற்படையினால், 2026 ஒக்டோபர் 02 முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 50 நபர்களுடன் 33 டிங்கி படகுகளும், ஒரு (01) கனோய் படகும், அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து (05) நபர்களுடன் ஒரு (01) பலநாள் மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டன.
அதன்படி, திருகோணமலை பவுல் பொயிண்ட், லங்காபட்டுன, நாயாறு, தொடுவாய், கதிரவேலி, மார்பிள் பீச், இறக்கண்டி, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, கோவிலன், புதுமாத்தளன், புத்தளம் முகத்துவாரம் மற்றும் கல்லாறு ஆகிய கரையோர மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, மூதூர், குச்சவெளி, வாழைச்சேனை, கோட்பே, யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து (05) நபர்களுடன் ஒரு (01) பலநாள் மீன்பிடிப் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. பின்னர், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்களும் படகும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.













