ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 475 கிலோகிராமிற்கும் அதிகமான தொகை தலல்ல, நாஓட்டுன்ன கடற்கரையில் சட்டத்தின் பிடியில்

24 Oct 2026

இலங்கை கடற்படையினரும் இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களமும் இணைந்து, மாத்தறை, தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இன்று (2026 ஒக்டோபர் 24) காலை மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 475 கிலோகிராமிற்கும் அதிகமான அளவைக் கொண்ட பொதிகள் மற்றும் பயணப் பைகள் இருபத்தொன்று (21), நாஓட்டுன்ன கடற்கரையில் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினரும் இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தினரும் இணைந்து, மாத்தறை, தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் விசேட கூட்டு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இதன்போது, நாஓட்டுன்ன கடற்கரையில் காணப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பத்து (10) பொதிகளும் பதினொரு (11) பயணப் பைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், குறித்த போதைப்பொருள் தொகையைக் கொண்டுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒரு (01) டிங்கிப் படகும் கைப்பற்றப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, 200 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 200 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) மற்றும் 275 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 275 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, குறித்த போதைப்பொருள் தொகை மற்றும் டிங்கிப் படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப் படவுள்ளது.

இந்தப் போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா, இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இணையாக, ‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடல்சார் வலயத்தை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாகத் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படைத் திணைக்களத்தினரும் இணைந்து, மாத்தறை, தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 475 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுடைய 21 பொதிகள் மற்றும் பயணப் பைகளுடன் ஒரு டிங்கிப் படகும் நாஓட்டுன்ன கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு காலப்பகுதியில், இலங்கை கடற்படையினரும் இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம், 97 பில்லியன் ரூபா மொத்த வீதிப் பெறுமதியுடைய அபாயகரமான போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். மேலும், இலங்கை கடற்படை, கடலோரக் காவல்படைத் திணைக்களம், ஏனைய ஆயுதப் படைகள், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் இதன்போது பாராட்டினார்.

மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், இலங்கை கடற்படையினர் கடலோரக் காவல்படைத் திணைக்களம், ஏனைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து, இவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் தடையின்றி முன்னெடுத்து வருகின்றனர்.

Accessibility Tools