போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 06 பொதிகள் வெலிகம கப்பரத்தோட்டா கடற்கரையில் கைப்பற்றப்பட்டன

15 Oct 2026

இலங்கை கடற்படைக்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, இலங்கைக்குத் தெற்கே தேவேந்திரமுனைப் பிரதேசத்திற்கு அப்பால் ஆழ்கடலில் 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு (01) உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஐந்து (05) சந்தேகநபர்களையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

அதன்படி, குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கை கடற்படை, அரச புலனாய்வுச் சேவை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் விளைவாக, இன்று (2026 ஒக்டோபர் 15) காலை வெலிகம கப்பரத்தோட்டா கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு (06) பொதிகள், இரண்டு (02) செய்மதித் தொலைபேசிகள் மற்றும் இணைய இணைப்பு சாதனமொன்றும் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டஐந்து (05) சந்தேகநபர்களும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக மீனவ சமூகத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் வழங்கும் சிறப்பான ஒத்துழைப்புடன், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கையைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடற்பரப்புகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Accessibility Tools