சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் 65 பேர் சட்டத்தின் முன்னிலையில்
இலங்கை கடற்படையினால், 2026 செப்டம்பர் 01 முதல் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் மூலம்; தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுபத்து மூன்று (63) நபர்களும், இலங்கை பொளிஸாருடன் இணைந்து காத்தான்குடி நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட நாற்பத்து நான்கு (44) மீன்பிடி வலைகளுடன் இரண்டு (02) நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் 26 டிங்கி படகுகள், ஒரு (01) கெப் வாகனம் மற்றும் இரண்டு (02) டிராக்டர்களும் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்பட்டன.
மேலும், திருகோணமலை ஜமாலியா, பவுல் பொயிண்ட், இலக்கந்தை, புறாத்தீவு, நதிதீவு, அலாஸ்வத்தை, நிலாவெளி, யாழ்ப்பாணம் கட்கைக்காடு, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் மற்றும் மட்டக்களப்பு அறுகம்பே கடற்கரை மற்றும் கடல் பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில், கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடி படகுகள், டிராக்டர்கள், கெப் வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பொத்துவில் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.













