தலைமன்னார் கடல் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினர், இன்று (2026 செப்டம்பர் 05) தலைமன்னார் கடற்பகுதியில் மணல் திட்டு ஒன்றில் வழிதவறித் தவித்த ஒரு குழுவினரை பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்குத் தேவையான மானுடவியல் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, கடற்படையினரால் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்தக் குழுவினர் அவதானிக்கப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், இவர்களில் ஒரு (01) ஆணும், நான்கு (04) பெண்களும், 2 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட மூன்று (03) குழந்தைகளும் அடங்குவர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, இந்தக் குழுவினர் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் ஊடாக வந்துள்ளதாகவும், இதற்கு முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அத்துடன், இலங்கை கடல் எல்லைக்குள் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், உயிர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படை வழங்கும் அர்ப்பணிப்பை இது மீள உறுதிப்படுத்துகிறது













