P 4447 அதிவேக தாக்குதல் படகில் காணாமல் போன அதிகாரி என சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான ஊடக அறிக்கை

04 Sep 2026

P 4447 அதிவேகத் தாக்குதல் படகில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, காணாமல் போனதாகப் பதிவான அதிகாரியினுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இன்றைய தினம் (2026 செப்டம்பர் 04) காலையில் கடற்படை சுழியோடிகளால் அப் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்துகிறது.

கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் நீருக்கடியிலான சவால்களுக்கு மத்தியிலும் இந்த விசேட தேடுதல் (சுழியோடும்) நடவடிக்கை பாதுகாப்பாக முன்னெடுக்கப்பட்டது. அந்தப் படகானது சுமார் 80 அடி ஆழத்தில் அமைந்திருந்ததோடு, அங்கு நீருக்கடியிலான பார்வைத்திறனும் மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டது. அத்துடன், படகிற்குள்ளிருந்த குறுகிய இடவசதியானது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுழியோடிகளுக்கு மேலும் ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்கே இலங்கை கடற்படை முக்கியத்துவம் வழங்கியிருந்தது. படகிலிருந்த ஏனைய 11 நபர்களும் அங்குலான பொலிஸார் மற்றும் பிரதேச மீனவ சமூகத்தின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்காக பாணந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக சிலாபம் வரையிலான கடற்பரப்பு மற்றும் கடற்கரைப்பகுதி முழுவதும் பரந்தளவிலான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இலங்கை கடற்படையானது இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, இத்தேடுதல் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகக் கிடைக்கக்கூடிய அனைத்துக் கடல்சார் மற்றும் வான்சார் வளங்களையும் அதிகபட்சமாகப் பயன்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான படகைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நிலவிய கொந்தளிப்பான கடல் நிலைமை மற்றும் சவாலான நீருக்கடியிலான சூழல் என்பன இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குக் தடையாக அமைந்ததோடு மட்டுமன்றி, சுழியோடிகள் மற்றும் மீட்புக் குழுவினருக்குக் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. எனவே, இலங்கை கடற்படையானது இச்சூழ்நிலைகளைத் தொடர்ச்சியாகக் கணிப்பிட்டு, நீருக்கடியிலான சூழல் பாதுகாப்பான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக அமைந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே இவ்விசேட சுழியோடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்நிலையில் இன்று காலையில் மீட்டெடுக்கப்பட்ட சடலத்தின் பிரேத பரிசோதனை, அடையாளம் காணல் மற்றும் ஏனைய அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

படகின் விபத்துக்கான காரணங்களை ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடலிலுள்ள மூழ்கிய பழைய கப்பலின் எச்சங்களுடன் படகு மோதியிருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து, மீட்கப்பட்ட நபர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடையும் வரை விபத்துக்கான காரணம் குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது. இந்நடவடிக்கை முழுவதிலும், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதும் விபத்துக்குள்ளான படகைக் கரைக்குக் கொண்டுவருவதுமே கடற்படையின் முதன்மை இலக்காக இருந்தது.

இலங்கை கடற்படையானது, முழுமையான மற்றும் தொழில்சார் விசாரணையின் ஊடாக இச்சம்பவத்தின் முழுமையான பின்னணியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்காலத்தில் அறியத்தரப்படும்.

Accessibility Tools