SPORT NEWS › 2026

இலங்கை கடற்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்திக் கட்டமைப்பு தெற்கு கடற்படை கட்டளையில் திறந்து வைப்பு

13 Nov 2026

இலங்கை கடற்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ், இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷிண நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் காலி, பெட்டிகலவத்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் செயற்பாட்டு மையக் கட்டடத் தொகுதியில் (Onboard Security Team – OBST) புதிதாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்திக் கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு, இன்று (2026 நவம்பர் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையில் மின்சாரச் செலவைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் எரிசக்தி முகாமைத்துவத்தை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் எட்டு (08) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று (2026 நவம்பர் 13) திறந்து வைக்கப்பட்ட இந்த இரண்டாவது (02) சூரிய மின்சக்தி உற்பத்திக் கட்டமைப்பின் மூலம் 160 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் செயற்பாட்டு மையத்தின் அன்றாட மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிவதுடன், இத்திட்டத்திற்காகச் செலவிடப்பட்ட முதலீட்டை நீண்டகால அடிப்படையில் ஈடுசெய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல நன்மைகளையும் இலங்கை கடற்படைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இத்திறப்பு விழாவின்போது, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் நன்மைகள் தொடர்பில், குறித்த திட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, கெப்டன் மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல் திணைக்களம் (தெற்கு), கெப்டன் சமர நாணயக்கார அவர்களால் கடற்படைத் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா மற்றும் அக்கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் அருண வீரசிங்க உள்ளிட்ட கடற்படைத் தலைமையகத்தின் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools