SPORT NEWS › 2026

05 ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் கடற்கரை கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படைக்கு வெண்கலப் பதக்கம்

23 Oct 2026

2026 ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஓமானில் நடைபெற்ற 05 ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற இலங்கை கடற்படை வீராங்கனைகள் தாய்நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.

அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படை மகளிர் கடற்கரை கரப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வுமன் லீடிங் சீமன் ஏகேடி லக்ஷானி மற்றும் வுமன் ஓடினரி சீமன் எம்ஜீடி பண்டார ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது, பலமிக்க அல்ஜீரிய மகளிர் அணியை 2–0 என்ற செட் கணக்கில் தோற்கடித்த இலங்கை கடற்படை மகளிர் அணி, 05 ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் (CISM) கடற்கரை கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.

மேலும், இப்போட்டியில் மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கடற்படையின் கடற்கரை கரப்பந்தாட்டக் குழுவின் செயலாளரான கொமாண்டர் மதுஷான் சில்வா பங்கேற்றதுடன், போட்டியின் சர்வதேச நடுவராக லீடிங் சீமன் ஏஜிஎச் சில்வா பங்கேற்றார்.

மேலும், இன்று காலை நாட்டை வந்தடைந்த கடற்படைக் குழுவினரை வரவேற்கும் நிகழ்வு, விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க அவர்களால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Accessibility Tools