மஹியங்கனை பிரதேச வாசிகள் ஆயிரம் பேருக்கு கடற்படையினரால் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்பாடு

மஹியங்கனையில் உள்ள வவுகம்பஹா மற்றும் பெலிகல்ல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த சுத்தமான குடிநீருக்கான தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் கடற் படையினரால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நேற்றைய தினம் (29) ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பெலிகல்ல தியம்பன எல தர்மவிஜய பௌத்த நிலையம் மற்றும் மீகஹபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதேசவாசிகள் நன்மையடைய உள்ளனர். தென் கிழக்கு கடற்படை கட்டளையாகத்தின் பணிப்புரையின் கீழ் தர்மவிஜய பௌத்த நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரதேசவாசிகள் மாத்திரமன்றி பௌத்த மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்யும் யாத்திரிகர்களும் நன்மை அடைய உள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் பிராந்திய பௌத்த விகாரைகளின் பிரதமா விகாராதிபதிகள், மகியங்கனை பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பிரதேசவாசிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.