தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படையால் 05 மில்லியன் ரூபா நன்கொடை

தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி சேர்க்கும் விழா இன்று (2021 பிப்ரவரி 12) கொழும்பு 07, சம்போதி விஹாரயவில் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 05 மில்லியன் ரூபா அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நன்கொடையாக வழங்கினார்.

கெளரவ. பிரதமர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தீகவாபி தூபின் மறுசீரமைப்பு திட்டம் 2020 நவம்பர் 11 ஆம் திகதி தொடங்கப்பட்டதுடன் குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீகவாபி விஹாராதிபதி மஹஒய சோஹித தேரரின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மைக்கான ஜனாதிபதி பணிக்குழு மூலம் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இலங்கை கடற்படையின் புத்த சங்கத்தால் வழங்கப்பட்ட தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான 05 மில்லியன் ரூபா நிதி, கடற்படைத் தளபதியால், இன்று (2021 பிப்ரவரி 12) அதி மேதகு ஜனாதிபதியிடம் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அஸ்கிரிய அத்தியாயத்தின் அனுநாயக வேடருவே உபாலி தேரர் உட்பட தேரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மை தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.