கடற்படையால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன

கடற்படை சமூக சேவை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை இன்று (2021 ஏப்ரல் 21) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தலசீமியா நோய் இலங்கையில் மிகவும் பொதுவான மரபுவழி இரத்தக் கோளாறாகக் கருதப்படுகிறது. அடிக்கடி இரத்தமாற்றத்தின் விளைவாக முக்கிய உறுப்புகளில் சேகரிக்கப்பட்ட அதிகப்படியான இரும்பு வைப்புகளை அகற்ற தலசீமியா நோயாளிகளுக்கு உட்செலுத்துதல் இயந்திரங்கள் மிகவும் அவசியமானது. அதிக விலை கொண்ட உட்செலுத்துதல் இயந்திரங்கள் காரணமாக தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை உணர்ந்து, கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு 2011 ல் குறைந்த விலையில் தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரத்தை தயாரித்தது. இதற்கிடையில், அனைத்து அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்திலிருந்து இந்த உன்னத காரணத்திற்காக தானாக முன்வந்து நிதி உதவி வழங்குகின்றனர்.

அதன்படி, சந்தையில் ரூ .75,000.00 முதல் ரூ. 100,000.00 வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்ற தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரத்தை சுமார் ரூ. 4,250.00 குறைந்த விலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மூலம் தயாரித்து வழங்கப்படுகிறது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினால் தயாரிக்கப்பட்ட தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களுக்காக 2011 ஆம் ஆண்டில் இலங்கையின் அழகுசாதனப் பொருட்கள், சாதனங்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (CDDA –Cosmetics, Devices & Drugs Regulatory Authority) சான்றிதழ் Certificate No (DVR-PR-019014) வழங்கப்பட்டதுடன். தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை உற்பத்திக்காக இலங்கையின் பொறியாளர்கள் நிறுவனத்தால் வழங்கப்படுகின்ற இலங்கையில் சிறந்த நடுத்தர அளவு தயாரிப்பாளருக்கான தேசிய விருது 2012 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை பெற்றது. இது இந்த கடற்படை சமூக சேவை திட்டத்தால் பெறப்பட்ட மிக உயர்ந்த மரியாதையாகும்.

2011 முதல், இலங்கை கடற்படை இந்த உன்னத காரணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இது வரை 2374 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை தேசிய வைத்தியசாலைகளுக்கும் பல கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலசீமியா குழந்தைகளுக்கும் விநியோகித்தது. மேலும், கடற்படை தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் இந்த ஆண்ட்டில் மேலும் 400 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை தயாரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் இந்த இயந்திரங்களின் பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் இலவசமாகவும் விரைவாகவும் வழங்குகிறது.

இன்று இடம்பெற்ற 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் அடையாளப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயற்ற நோய்கள் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் சம்பிகா விக்ரமசிங்க, கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குனர் கொமடோர் பிரதீப் ரத்நாயக்க உட்பட கடற்படையின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.