முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக படுக்கைகள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேறு பிரிவுக்கு HDU/ICU (High Dependency Unit / Intensive Care Unit) வகையில் 03 படுக்கைகள் வழங்கும் நிகழ்வு 2021 மே 12 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையில் கோவிட் -19 நோய்த்தொற்றுடைய தாய்மார்களின் நலனுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியில் இருந்து பெறப்பட்ட HDU/ICU வகையில் 03 படுக்கைகள் இவ்வாரு வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் பிரியந்த கருணாரத்னவிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்காக முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் டாக்டர் திருமதி காஞ்சனா ஜெயதிலக, சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ஆதரவாக சுகாதார அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையால் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் நிர்மாணிக்கபடுகின்ற 12 மாடி கொண்ட சிறப்பு இருதய மற்றும் சிக்கலான பராமரிப்பு வளாகத்தின்(Cardiac & Critical care complex) 09 தளங்கள் வரை தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இந்த சிறப்பு இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானத்தை விரைவில் முடிக்க கடற்படை சிவில் பொறியியல் பிரிவு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.