அமெரிக்காவில் நடைபெற்ற 24 வது சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்படை தளபதி தாய்நாட்டிற்கு வந்துள்ளார்

அமெரிக்காவின் ரோட் தீவு பிராந்தியத்தில் நியூபோர்ட் நகரத்தில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில், 2021 செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்ற அமெரிக்க கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் (International Seapower Symposium) 24 வது அமர்வுக்காக இலங்கை கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

1969 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூபோர்ட் நகரத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 24 வது அமர்வு ‘ஒற்றுமையில் வலிமை’ (‘Strength in Unity’) என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது. இந்த வருட மாநாட்டின் பிரதம அதிதியாக அமெரிக்க கடற்படையின் செயலாளர் மதிப்பிற்குரிய கார்லஸ் டெல் டோரோ (Carlos Del Toro) அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் தளபதிகள் கலந்து கொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான கடற்படைத் தலைவர்கள் ஒன்றிணைந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது இந்த சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டு மூலம் கடற்கொள்ளை தடுப்பு, பேரழிவு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி, கடல் தேடல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைத்தல், கூட்டு இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் இயக்குதல், ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான கூட்டு சட்டத்தை அமல்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் கடல் மாசுபாட்டை தடுத்தல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும்.

இந்த அமர்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் மைக்கேல் மிசெல் கில்டே (Admiral Michael Gilday) இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது அமெரிக்க கடற்படை தளபதி, அவரது அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை கடற்படைத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார். 100 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படைத் தலைவர்கள், கடலோர காவல்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த கடற்படைத் தலைவர்ளுக்கு கடல்சார் பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு உத்திகளைப் பற்றி விவாதிக்க இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்க கடற்படை தளபதி வலியுறுத்தினார்.

அது தவிர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன முக்கிய நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற பல இருதரப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அமெரிக்க கடலோர காவல்படையின் தளபதி அட்மிரல் கார்ல் எல் ஷூல்ட்ஸ், (Admiral Karl L. Shultz) இடையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது அமெரிக்க கடற்படையில் இருந்து இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மூன்றாவது கப்பலாக கடலோர காவல்படைக் கப்பலொன்று வழங்குவது தொடர்பாக நன்றி தெரிவித்தார். மேலும், இலங்கை கடற்படைக்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு கப்பல்களின் செயல்பாட்டு திறனை மதிப்பீடு செய்ததற்கும் நன்றி தெரிவித்தார். அமெரிக்க கடலோர காவல்படை மூலம் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மூன்றாவது கப்பலின் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதற்கு முன் அமெரிக்க கடலோர காவல்படையால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட சமுதுர கப்பல் மூலம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஆழ்கடல் போதைப்பொருள் சுற்றிவலைப்புக்கு அமெரிக்க கடலோர காவல்படை தளபதி கடற்படை தளபதியை வாழ்த்தினார். மேலும், இலங்கை கடலோர காவல்படையின் செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினார்.

இலங்கை கடற்படை தளபதி மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை கப்பல் குழுவின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பெபரோ (Samuel J. Paparo) இடையில் நடைபெற்ற இரு தரப்பு கலந்துரையாடலின் போது அட்மிரல் செமுவேல் ஜே.பெபரோ, CARAT 2021 போன்ற கடற்படை பயிற்சிகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்த எப்போதும் பயன்படுத்தும் என்றும், இது போன்ற பயிற்சிகள் மூலம் பரிமாறப்படும் அறிவு எப்போதும் பரஸ்பர நல்வாழ்வுக்கு உகந்தது என்று கூறப்பட்டது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் (Admiral Karambir Singh) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் போது, இந்திய பெருங்கடல் மூலமாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. மேலும், இந்தியப் பெருங்கடல் மூலமாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்தியா, இலங்கை மற்றும் அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒரு திட்டத்தை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இலங்கை கடற்படையில் ஒரு விமானப்படை பிரிவை உருவாக்க தேவையான பயிற்சி வசதிகளையும் நிபுணத்துவத்தையும் இந்திய கடற்படை மூலம் வழங்குவோம் என்றும் இந்திய கடற்படை தளபதி கூறினார். அக்டோபரில் இந்திய கடற்படையால் நடத்தப்படும் ‘GOA Conclave’ கடல்சார் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிற்கு அழைப்பு விடுத்தார்.

குறித்த மாநாட்டின் போது, பாகிஸ்தான் கடற்படையின் தளபதி அட்மிரல் முகமது அம்ஜாத் கான் நியாசி (Admiral Mohammed Amjad Khan Niazi) வுடன் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பில், இரு நாட்டு கடற்படைகளுக்கிடையேயான பரஸ்பர உதவியைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாகிஸ்தான் கடற்படை மூலம் இலங்கை கடற்படை வீரர்களுக்கு, குறிப்பாக முறைசாரா படிப்புகளுக்கு இலவச பயிற்சி வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பாகிஸ்தான் கடற்படை தளபதி திருகோணமலை துறைமுகத்திக்கு மேற்கொண்ட தனது கடைசி இலங்கை பயணத்தை நினைவு கூர்ந்தார் மற்றும் பாகிஸ்தான் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படை பயிற்சியில் இலங்கை கடற்படை சமீபத்தில் பங்கேற்றதைப் பாராட்டினார்.

பிராந்திய மற்றும் பிராந்தியமற்ற நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் இத்தகைய தனித்துவமான சர்வதேச கடல் மாநாடுகளில் கலந்து கொள்வது மற்றும் மேம்பட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மூலம் இலங்கை கடற்படையின் முன்னேற்றத்திற்கு பல வாய்ப்புகளை உருவாக்கும்.