யாழில் உள்ள சதுப்புநில பகுதியில் கடற்படையினரால் 5,000 கண்டல் தாவரங்கள் நடுகை

யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இந்த சதுப்புநில பாதுகாப்பு திட்டம், இம்மாதம் 3ம் திகதி யாழ் கிலாலி சதுப்பு நிலப்பகுதியில் கண்டல் தாவரங்களை நடுகை செய்ததில் இருந்து ஆரம்பமானது. கண்டல் தாவரங்கள் கடல் சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவைள் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை உறுதிப்படுத்த உதவுவதுடன் அரிப்பைத் தடுத்து தீவிர வானிலை நிலைகளில் புயல் தாக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் அவைகள் மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கான சிறந்த சூழலினையும் பெற்றுக்கொடுக்கின்றது.

எனவே சதுப்பு நிலப்பகுதிகளில் இத்தகைய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் தக்க தருணங்களில் அழிவைடயாமல் பாதுகாப்பதானது ஒரு இன்றிய அமையாத ஒன்றாக காணப்படுகின்றது. இதன் முக்கியத்துவத்ததை சரியான நேரத்தில் உணர்ந்த கடற்படை அதன் முயற்சியால் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பல கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைய, யாழில் உள்ள சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்கும் வகையில் சுமார் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் திட்டம் கடந்த 3ம் திகதி கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் கிலாவி சதுப்பு நிலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டத்தின் இறுதிப் பகுதி பொன்னாலை சதுப்புநில பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் நடைபெற்றது.